×

குழந்தைகள் விற்பனை விவகாரம் : கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

நாமக்கல் : நாமக்கல்லில் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து ராசிபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அமுதா என்ற விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் பல வருடங்களாக குழந்தைகளை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உள்ளிட்ட 8 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விரிவான விசாரணை நடத்துவதற்காக கடந்த 29ம் தேதி இந்த வழக்கானது சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. பெரும்பாலான குழந்தைகள் கொல்லிமலையில் இருந்து வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் கொல்லிமலை பகுதியில் பிறந்த குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 14 குழந்தைகள் காணவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : detainees , Children's Sale, Amudha, CBCID, Namacal Criminal Court
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...