×

எட்டயபுரம் அருகே குட்டை அமைத்து குளத்தை பாழ்படுத்திய அதிகாரிகள்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே இளம்புவனம் அய்யன்குளத்தை குட்டை அமைத்து அதிகாரிகள் பாழ்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள், குளத்தின் உள்ளேயே கொட்டப்பட்டுள்ள கரிசல் மண்ணால் கரையை பலப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா இளம்புவனம் கிராமத்தில் அய்யன்குளம் உள்ளது. கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும், கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் பம்புகள் மற்றும் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக இந்த ஒரு குளம் தான் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதியில் தான் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் நிறைந்த இந்த கிராமத்தின் நீர் ஆதாரமாக உள்ள இந்த குளத்தை பொதுப்பணித்துறை சரியாக பராமரிப்பு செய்வதில்லை. முறையாக குளத்தை ஆழப்படுத்தி கரையை உயர்த்தாமலும், குளத்திற்கு செல்கின்ற நீர்வரத்து ஓடைகளை பராமரிக்காமலும் ஏனோ தானோ என்று வருடா வருடம் ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரில் ஒப்புக்கு வேலை செய்கின்றனர். இதனால் குளம் மழைக்காலங்களில் சரியாக நிரம்புவதில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் அய்யன்குளத்தினுள் குட்டை அமைக்கப்பட்டது, குட்டை அமைப்பதற்காக குளத்தின் மையப்பகுதியில் ஆழப்படுத்தப்பட்ட கரிசல் மண்ணை குளத்தின் கரையோரம் கொட்டி கரையை உயர்த்தி பலப்படுத்தாமல் குளத்தின் மையப்பகுதியில் குளத்திற்குள்ளே குளம் வெட்டியதை போல் ஆழப்படுத்திய பகுதியை சுற்றி கரிசல்மண்ணை கொட்டி வைத்துள்ளனர். இதனால் மழைகாலத்தில் குளத்திற்கு செல்லும் தண்ணீர் குளம் முழுதும் நிரம்பாமல் மையப்பகுதியில் மட்டும் நிரம்பி மீதமுள்ள தண்ணீர் வெளியேறிவிடும் மேலும் அதிக அளவு நீர் குளத்திற்கு வரும் போது குளத்திற்குள் குட்டை அமைத்து அதை சுற்றி போடப்பட்டுள்ள மண் குளத்திற்குள்ளேயே கரைந்து மேலும் குளம் மேடாகிவிடும்.  இதனால் குளத்திற்கு செல்லும் தண்ணீர் வீணாகி வெளியேறிவிடும். எனவே சம்மந்தப்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மழைக்காலம் துவங்கும் முன் இளம்புவனம் அய்யன்குளத்திற்குள் கிடக்கும் கரிசல்மண்ணை அகற்றி கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இளம்புவனம் சிபிஎம் கிளைசெயலாளர் மூக்கையா கூறியது. இளம்புவனத்தில் உள்ள அய்யன்குளம் தான் இக்கிராமத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட பணம் வசூலித்து குளத்தின் மையப்பகுதியில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டது. அப்போது ஆழப்படுத்திய கரிசல் மண்ணை குளத்திற்குள்ளேயே கொட்டியுள்ளனர். இதனால் குளத்தில் நீர்தேங்குவதில் தடை ஏற்படும் நிலை உள்ளது. சும்மாகிடந்த சங்கை ஊதிகெடுத்தான் ஆண்டி என்ற கதையில் நன்றாக இருந்த குளத்தில் குட்டையை வெட்டி அங்கேயே மண்ணை போட்டு உள்ளனர். எனவே குளத்திற்குள் உள்ள கரம்பை மண்ணை அகற்றி கரையில் கொட்டி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pond ,Ettayapuram , Ettayapuram, Ilankuvanam Ayyankulam
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...