×

குமரியில் சுட்டெரிக்கும் அக்னி வெயில்: கருகிய பனை மரங்கள்

மார்த்தாண்டம்: பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் கோடைக்காலமாக உள்ளது. இந்நேரத்தில் வெயில் வாட்டி வதக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் பிப்ரவரி முதலே வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் சதத்தை தாண்டி அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் உச்சத்தை தொட்டு வெப்பம் விளாசி வந்தது. குமரி மாவட்டத்திலும் 100 டிகிரியை எட்டி கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்தது. கோடை மழை சில நாட்கள் தலைகாட்டிவிட்டு சென்றுவிட்டது. பானி புயலால் மழை பெய்யும் என கூறினர். அதுவும் கைவிரித்து விட்டது. இதனிடையே அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி உள்ளது. இது 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நிலையில் கத்திரி வெயிலின் தாக்கத்தால் வெயில் கொளுத்தி வருகிறது. அடுத்த 3 வாரங்களில் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.இதனிடையே கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரிப்பிஞ்சு, எலுமிச்சை மற்றும் கரும்பு சாறு, மோர், பானகம் உள்ளிட்ட இயற்கை பானங்களை அருந்துவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கருகிய பனை மரங்கள்

வெயிலின் தாக்குதலால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. பல இடங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வறட்சிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. தண்ணீர் மற்றும் போதிய தீவனம் இன்றி கால்நடைகள் வளர்ப்போர் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். குலை தள்ளிய வாழை மரங்கள் தண்ணீர் இல்லாமல் ஒடிந்து வருகின்றன. இதனால் வருவாய் கிடைக்கும் நேரத்தில் விவசாயிகள் ெபாருளாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வறட்சியை தாங்கி வளரும் கற்பக விருச்சம் என்று அழைக்கப்படும் பனைமரங்களும் கருகத்தொடங்கி உள்ளன. ராமனாதிச்சன்புதூர் பகுதியில் ஏராளமான பனை மரங்கள் கருகி உள்ளன. இதுபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பனை மரங்கள் கருகி வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumari , Agni Veil, Palm trees
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து