×

தனுஷ்கோடி வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஆக்ரோஷ அலைகளால் ஆபத்து

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியை பார்க்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் கடலோரத்தில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், ஆபத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கோடை விடுமுறையால் ராமேஸ்வரம் வரும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை வசதி இருப்பதால் கார், பஸ், ஆட்டோக்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு செல்கின்றனர். தனுஷ்கோடி புயலில் அழிந்த கட்டிடங்களை பார்வையிட்ட பின், அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று சேது பாலம் எனும் கடலுக்குள் அமைந்துள்ள மணல் திட்டுப்பகுதிகளையும் பார்வையிடுகின்றனர். இவர்களில் பலர் அரிச்சல்முனையில் இரண்டு கடலும் ஒன்று சேரும் கடலோரப்பகுதிக்கு சென்று கடலில் இறங்கி கால்களை நனைத்து விளையாடுகின்றனர்.

குழந்தைகள் முதல் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் கடல் நீரில் இறங்கி விளையாடுகின்றனர். நேற்றும் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் பலர் கடலில் இறங்கி விளையாடினர். கடந்த சில நாட்களாக தனுஷ்கோடியில் ஆக்ரோஷ அலைகளுடன் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே இப்பகுதியில் கடலில் மூழ்கி பலர் பலியாகியுள்ள நிலையில், சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்கி விளையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், வெளியூர்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் பார்க்கும் வகையில் இதுகுறித்து எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், கடல் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanushkodi , Dhanushkodi, Travel, Summer Holiday, Rameswaram
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...