×

எண்ணூர் துறைமுகம் அருகே ஆக்கிரமிப்பின் பிடியில் சர்வீஸ் சாலை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர்: சென்னை துறைமுகம் - எண்ணூர் துறைமுகம் வழித்தட சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவொற்றியூர், மணலி, மாதவரம், மணலி புதுநகர் போன்ற பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக வளாகங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை துறைமுகத்திற்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யக்கூடிய கன்டெய்னர்களை கொண்டு செல்வதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைலர் மற்றும் கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன.

இந்த லாரிகள் பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி சாலை மற்றும் எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்று வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் கன்டெய்னர் லாரிகள் அதிவேகமாக, தாறுமாறாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் துறைமுகம் வரை சுமார் 17 கி.மீ. தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய 4 வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

தற்போது இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த 4 வழிப்பாதையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை பல இடங்களில் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. சாலை முழுவதும் மண் குவியலாக இருப்பதால், இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சர்வீஸ் சாலையில் இந்த கன்டெய்னர் லாரிகளையும், தனியாருக்கு சொந்தமான பழுதான வாகனங்களையும் நிறுத்த அனுமதிக்கின்றனர்.

இதுஒருபுறம் இருக்க சர்வீஸ் சாலையின் குறுக்கே தடுப்பு கற்களை வைத்து, சிலர் பழுதடைந்த வாகனங்களை சீரமைக்கும் பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘துறைமுகத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் கன்டெய்னர் லாரிகளை யார்டுகளில் நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சர்வீஸ் சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.

போக்குவரத்து போலீசாரும் பணம் பெற்றுக்கொண்டு இதற்கு அனுமதிக்கின்றனர். மேலும் சர்வீஸ் சாலைகளில் லாரிகளை பழுதுபார்ப்பது, பஞ்சர் போடுவது, வியாபாரம் நடத்துவது போன்றவைகள் நடைபெறுகிறது. இதற்காக, அவ்வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாதபடி கற்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் பிரதான சாலையில் செல்லும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், தனியார் வாகனங்களை அகற்றவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,motorists ,Ennore Harbor , Ennore port, occupation, serviced road
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...