×

கமுதியில் இருந்து மதுரைக்கு வந்து நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாணவி திடீர் உயிரிழப்பு : மயானத்தில் உறவினர்கள் போராட்டம்

சாயல்குடி: மதுரையில் நீட் தேர்வு எழுதி விட்டு திரும்பிய கமுதி பகுதியை சேர்ந்த மாணவி திடீரென உயிரிழந்தார். அரசு நிவாரணம் வழங்கக்கோரி மயானத்தில் உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா அபிராமம் அருகே பாப்பனம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. அபிராமம், அச்சங்குளம் நூற்பாலை தொழிலாளி. மனைவி சிவசக்தி. 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் சந்தியா (18).  மாற்றுத்திறனாளியான இவர், அபிராமம் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். அரசு பொதுத்தேர்வில் 299 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.நீட் தேர்விற்கு விண்ணப்பித்த சந்தியா, நேற்று முன்தினம் மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுதி விட்டு, மாலை தந்தை முனியசாமியுடன் மதுரையிலிருந்து கமுதி செல்லும் அரசு பேருந்தில் வந்தார். சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனம் அருகே திடீரென மயக்கமடைந்த சந்தியாவை, மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். வழியிலேயே சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.சந்தியாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பாப்பனம் கிராமத்திற்கு  நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலிக்கு பிறகு மயானத்திற்கு பிற்பகல் 3 மணியளவில் தகனம் செய்ய கொண்டு வந்தனர்.
அப்போது நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் இறப்பிற்கு தமிழக அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. நிவாரணமும் வழங்கவில்லை எனக்கூறி சந்தியாவின் உறவினர்கள், அவரது உடலை மயானத்தில் வைத்து விட்டு,  இறுதிச்சடங்குகளை செய்ய மறுத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வந்த கமுதி தாசில்தார் கல்யாணக்குமார், அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜெயராணி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு கலெக்டர் வந்து நிவாரணம் அறிவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை கைவிட  மறுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பரமக்குடி ஆர்டிஓ ராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘கல்வித்தகுதி அடிப்படையில் மாணவியின் பெற்ேறாருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என உறுதியளித்தார். இதனை ஏற்று  மாணவியின் உறவினர்கள் மாலை 5 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, இறுதிச்சடங்கை முடித்து விட்டு கிளம்பி சென்றனர்.இயற்கைக்கு மாறான மரணம்?: மாணவி சந்தியாவின் உடல், மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது டாக்டர்கள், ‘‘இயற்கைக்கு மாறான மரணம்’’ என கூறியதாக தெரிகிறது. போலீசார்  கூறும்போது, ``பிரேத பரிசோதனை அறிக்கையை பெற 5 முதல் 7 நாட்கள் ஆகலாம்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,death ,Madurai ,relatives ,cemetery , Madurai,Madurai, Sudden, death ,cemetery
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...