×

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் சிக்கிய இலங்கை வாலிபரிடம் நாகர்கோவில் ரயில் டிக்கெட்: தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை

நாகர்கோவில்: இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியாவிலும் போலீசார் தொடர் சோதனைகளை  நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிங்களத்தில் பேசியபடி நின்றிருந்த மலுக்கு ஜூத் மில்க்கன் டயஸ் (30) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை ஐபி போலீசார், தமிழக கியூ பிரிவு போலீசார், என்ஐஏ, மிலிட்டரி இன்டலிஜென்ஸ், கேபினட் செக்ரட்ரியேட் அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். மேலும்  மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவும் பேசி வருகிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் வால்வெரி பகுதியில் உள்ள மீன்பிடி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், ஒரு வருடத்துக்கு முன்பு இந்தியாவுக்கு வந்ததாகவும் கூறுகிறார். அதே வேளை 2 மாதத்துக்கு முன்புதான் இங்கு வந்ததாகவும், கோயில்களுக்கு செல்வது தனது லட்சியம் என்றும் பின்னர் கூறி இருக்கிறார். தொடர்ந்து ஏப்ரல் மாதம் இங்கு வந்தேன் என்று மாற்றி கூறுகிறார். இவ்வாறு அவர் மாற்றி மாற்றி  பேசி வருவதால் போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து எமிரேட் விமானத்தில் இங்கு வந்ததாக கூறினாலும் அவரிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. எனவே படகு மூலம் இலங்கையில் இருந்து தமிழக பகுதிக்கு வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றிருக்கலாம்  என்று போலீசார் கருதுகின்றனர்.

 தொடர்ந்து நடந்த விசாரணையில் அவரிடம் நாகர்கோவிலில் இருந்து வர்க்கலை செல்வதற்கான ரயில் டிக்கெட் இருந்ததை கண்டுபிடித்தனர். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே டயஸ் முன்னதாக நாகர்கோவில்  வந்திருந்தாரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழைந்ததாக அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவருக்கு வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திட இலங்கையில் உள்ள செய்தி தாள்களில் இவரது படத்துடன்  விளம்பரம் வெளியிட இலங்கையில் உள்ள தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagercoil ,bus station ,Sri Lankan ,Trivandrum , Trapped, Tambanur ,bus station , Thiruvananthapuram
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்