×

பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டதால் 2 பேரை துப்பாக்கியால் சுட்டார் போலீஸ்காரர்: மயிலாடுதுறை அருகே பதற்றம்

மயிலாடுதுறை:  மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் வம்பு பேசியதை தட்டிக்கேட்ட இருவர் மீது போலீஸ்காரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது திருவாவடுதுறை ஆதீனம். கடந்த 10 வருடங்களுக்கு முன் 23வது குருமகா சந்நிதானத்தின் மீது கொலை முயற்சி நடந்ததிலிருந்து 2 போலீசார் ஆதின மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   நாகை ஆயுதப்படை போலீசான, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஜெகன்ராஜா(28) என்பவரும், மேலும் ஒரு போலீஸ்காரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   இந்நிலையில் போலீஸ்காரர் ஜெகன்ராஜா மப்டியில் சென்று திருவாவடுதுறை கடைவீதியில் குளிர்பான கடை நடத்தும் பெண்ணிடம் வெகுநேரமாக பேசிக்கொண்டிருப்பாராம். இதை பலரும் கண்டித்துள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு 10  மணிக்கு வழக்கம்போல் போலீஸ்காரர் ஜெகன்ராஜா மப்டியில் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.  இதை திருவாவடுதுறை மேலத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி மதி(47) தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதைபார்த்த  ஜெகன்ராஜா, மதியிடம் செல்போனை கேட்டு ஓங்கி அறைந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த மதி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஜெகன்ராஜாவை அடிக்க முயன்றார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், எங்கள் ஊருக்கே  வந்து எங்களையே அடிக்கிறாயா என்று ஜெகன்ராஜாவிடம் தட்டிகேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன்ராஜா  இடுப்பில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து மதியின் இடது கணுக்காலில் சுட்டார்.  

இதை தட்டிக்கேட்ட  ஊர் நாட்டாண்மை செல்வராஜை(40) துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்தி சென்றார்.  உயிருக்கு பயந்து ஓடிய செல்வராஜ் அங்குள்ள ஒரு கடைக்குள் புகுந்தார். ஆனால் விடாமல் விரட்டி  சென்ற  ஜெகன்ராஜா அவரது இடதுகாலிலும் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு இடது காலை துளைத்து வலது காலிலும் பாய்ந்தது. இதனால் செல்வராஜ் துடிதுடித்து கீழே விழுந்தார்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் குவிந்தனர். அப்போது வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தனது பைக்கை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ்காரரின் வாகனத்தை அடித்து நொறுக்கி தீ  வைத்து கொளுத்தினர். துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த மதி, செல்வராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்த குத்தாலம் போலீசார்  அங்கு வந்து தப்பி ஓடிய போலீஸ்காரர் ஜெகன்ராஜாவை இரவிலேயே கைது செய்தனர். அவரிடமிருந்த கைத்துப்பாக்கியையும், மீதமிருந்த 3 குண்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் அவரை  மயிலாடுதுறை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக ஜெகன்ராஜாவை நாகை எஸ்பி விஜயகுமார் தற்காலிக பணிநீக்கம் செய்தார். திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ெபண்களிடம் ஜொள்ளு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஜெகன்ராஜா கடந்த 2013ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். 2017 முதல் நாகை ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகவில்லை.   இவர் பெண்கள் உள்ள கடைகளுக்கு மட்டுமே  செல்வாராம். பெண்களிடம் பொருட்கள் வாங்குவதுபோல்  வேண்டுமென்றே ஜொள்ளுவிட்டு பேசிக்கொண்டிருப்பாராம்.  இதை அப்பகுதி மக்கள் கண்டித்து வந்தனர். நேற்றிரவும் அவர் பெண் வைத்துள்ள பெட்டிக்கடையில் நின்றதை மக்கள்  கண்டித்ததால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ஜெகன்ராஜா இந்த கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Policeman ,Mayiladuthurai , girl, Police, firearms,tension ,Mayiladuthurai
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...