×

எல்லாம் சரியாக நடந்தால்... பிரதமர் பதவி ஆசையை வெளிப்படுத்தினார் மாயாவதி

புதுடெல்லி: ‘‘எல்லாம் சரியாக நடந்தால், நான் அம்பேத்கர் நகரில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கிறது’’ என தனது பிரதமர் பதவி ஆசையை மாயாவதி நேற்று சூசகமாக வெளிப்படுத்தினார். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி  புதிய பிரதமரை அளிக்க திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் உ.பி.  அம்பேத்கர் நகர் அருகே மாயாவதி கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில், நாடாளுமன்ற கட்டிடம் முன் மாயாவதி  இருப்பது போன்ற பிரம்மாண்ட கட் அவுட்  வைக்கப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில் மாயாவதி பேசுகையில், ‘‘எல்லாம்  சரியாக நடந்தால், உ.பி.யின் அம்பேத்கர் நகரில் இருந்து நான் தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை உருவாகலாம் (இந்த மக்களவை தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது).  
அம்பேத்கர் நகரில் இருந்துதான், தேசிய அரசியலுக்கான பாதை தொடங்குகிறது. நமோ காலம் முடிந்து விட்டது. இது அம்பேத்கர் காலம்’’ என  தனது பிரதமர் ஆசையை மாயாவதி வெளிப்படுத்தினார்.

முன்மொழிந்த அகிலேஷ்: இதற்கிடையே உ.பியில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய  பிரதமர் மோடி, பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதியை, ஓட்டு வங்கிக்காக சமாஜ்வாடி கட்சி பயன்படுத்துகிறது, மாயாவதி தான் காங்கிரசுக்கு  எதிராக பேசி வருகிறார். சமாஜ்வாடியோ காங்கிரசிடம் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது’’ என குற்றம் சாட்டியிருந்தார். உத்தரப்பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு இருக்கும் ஆதரவை கண்டு பாஜ.விற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.  இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்லி எங்களை பிரிக்க மோடி முயற்சிக்கிறார் என்று மாயாவதியும், அகிலேஷும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மெகா கூட்டணியை சேர்ந்தவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார். அதுவும் அவர் பெண்ணாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே,  மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் அவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். பாதிக்கபட்ட மக்களின் குரலை ஒலிப்பதற்காகவே எங்கள் கூட்டணி உருவானது, இதயங்கள் இணைந்து உருவான இந்த கூட்டணி என்றும் உடையாது.  உ.பி  யில் பா.ஜ.,விற்கு 10 தொகுதி கூட கிடைக்காது’’ என்றார்.பிரதமர் பதவிக்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை, இப்படி சூசகமாக அகிலேஷ் யாதவ் முன்மொழிந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mayawati , prime minister's, post Expressed, Mayawati
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு