×

பார்முலாவுக்கு அனுமதி மறுப்பு பட்டாசு ஆலைகள் மூடப்படும் அபாயம்

சிவகாசி: பசுமை பட்டாசு தயாரிப்புக்கான பார்முலாவுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் (பெசோ) அனுமதி வழங்க மறுத்ததால், பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு மூடப்படும் நிலையில்  உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,076 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் கடந்த 2018, அக்டோபர் 23ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘‘பட்டாசு தயாரிக்க பேரீயம்  நைட்ரேட்டை பயன்படுத்தக் கூடாது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும்’’ உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஆலைகளை மூடி  போராட்டம் நடத்தினர்.கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்படுவதை ஏற்க முடியாது. பேரீயம் நைட்ரேட் பயன்படுத்தாமல், பசுமை பட்டாசு தயாரிக்கும் பார்முலாவை, இந்திய  அறிவியல் ஆராய்ச்சி மையம் (நீரி) ஏப்ரல் 30க்குள் தயாரித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையிடம் ஒப்புதல் பெற்று, அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, நீரி அமைப்பு சிவகாசி  பட்டாசு  ஆலைகளில் பசுமை பட்டாசு பார்முலாவை தயாரித்தது.

 ‘நீரி’ தயாரித்த பசுமை பட்டாசு பார்முலாவில் பேரீயம் நைட்ரேட் கலந்திருப்பதாக கூறி, மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் வழங்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக  அறிக்கை அனுப்பியுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பட்டாசு ஆலைகளில், நடப்பாண்டு தீபாவளிக்கான பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது ‘பெசோ’ அறிக்கைப்படி பட்டாசு தயாரிப்பு பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆலைகள் எந்தநேரமும்  மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : closure , Permission, Formula, Crackers, closed
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...