×

சென்னை மெட்ரோ ரயிலில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணியை தனியார்மயமாக்க நிர்வாகம் முயற்சி: ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் நிலைய கட்டுப்பாட்டாளர் பணியை தனியார்மயப்படுத்த நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கு முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. நிர்வாகத்தின் கீழ் பல்வேறு பணிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். காலை, மதியம், இரவு என மூன்று ஷிப்ட்களில் ஊழியர்கள் பணி செய்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையின் கீழ் மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுகிறது.

ஆனால், மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தனியார்மயத்தை நிர்வாகம் உட்படுத்தி வருவதாக ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், நிலைய கட்டுப்பாட்டாளர் பணியை, நிலைய பொறுப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதை முழுவதும் தனியார்மயப்படுத்த முயற்சி செய்வதாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் கூறியதாவது: ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முழுவதும் தனியார்மயப்படுத்த நிர்வாகம் முயற்சி மேற்கொள்கிறது. இந்தநிலையில், தற்போது நிலைய கட்டுப்பாட்டாளர் என்ற பணியை நிலைய பொறுப்பாளர் என்று மாற்றி அதற்கு தனியாக ஆட்களை நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது 16 பேர் வரையில் இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேருக்கும் ஒரே பொறுப்பு என்பதால் வேலை செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

இதேபோல், நிரந்தர ஊழியர்களை நீக்கிவிட்டு, முழுவதும் தனியார்மயப்படுத்தி தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இருவருக்கும் உள்ள பணிகள் என்ன என்பதையாவது நிர்வாகம் பிரித்துக்கொடுக்க வேண்டும். ஆனால், அதைவிடுத்து நிலைய கட்டுப்பாட்டாளர் என்ற ஒரு பதவி முழுவதையும் நீக்க நினைக்கிறது. தற்காலிக ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பையும் நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிரந்தர ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையும் கைவிட வேண்டும். இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : train ,Chennai Metro , Chennai, Metro train, work, try, accusation
× RELATED பீகாரில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட...