×

சம்பளத்தை நிறுத்தினால் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

சென்னை: : தகுதித் ேதர்வை காரணம் காட்டி, 1500 ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே நிபந்தனை விதித்து இருந்தது. இதுவரை 4  முறை வாய்ப்பு வழங்கப்பட்டும் 1500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் அவர்களின் ஏப்ரல் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் செய்வது தொடர்பாக பல்வேறு  அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மயில், நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 23.8.2010க்கு பிறகு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை கூறி அவர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்கக் கூடாது. 8 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றிய பிறகு அவர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அச்சுறுத்துவதும் நியாயமற்ற செயல். அரசு அறிவித்தபடி தகுதி தேர்வை நடத்தாமல் போனதும் ஒரு காரணம். இந்த ஆசிரியர்கள் முறையாக ஆசிரியர் பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள். எனவே தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தகுதி பெற்று வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போரை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஜூன் 7ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike ,announcement ,Teacher Coalition , Fight, teacher coalition, announcement
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து