×

அமைச்சர்கள் மோதல் எதிரொலி தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார் கிருஷ்ணசாமி: ஓட்டப்பிடாரத்தில் பரபரப்பு

சென்னை: ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் அமைச்சர்களுக்குள் ஏற்பட்ட மோதலால், மனம் வெறுத்துப்போன புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தனது பிரசாரத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு, கோவை புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு வருகிற 17ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. ஓட்டப்பிடாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், நடிகர் கமல் ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மூத்த தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுக்களுக்கிடையே மோதல் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனி ஆவர்த்தனம் செய்வதாக மற்ற அமைச்சர்கள் குற்றம்சாட்டுகிறார்களாம். ராஜேந்திர பாலாஜிக்கு  கடம்பூர் ராஜூ ஆதரவாக உள்ளாராம். இதனால் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் அதிருப்தியில் உள்ளார்களாம். இந்தநிலையில், ஓட்டப்பிடாரத்தில் செல்வாக்காக இருக்கும், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, 10 நாட்கள் பிரசாரம் செய்வதாக அறிவித்திருந்தார்.

அதேபோல 2 நாட்கள் பிரசாரம் செய்தார். ஆனால், அதிமுக அமைச்சர்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் பிசாரத்துக்கு செல்லும் இடங்களில் அதிமுகவினரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 2 நாட்கள் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுடன் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், திடீரென்று பிரசாரத்தை ரத்து செய்து விட்டு, சொந்த ஊரான கோவைக்குச் சென்று விட்டார். அவரை புதிய தமிழகம் கட்சி மட்டுமல்லாமல் அதிமுகவினர் போன் செய்து அழைத்தபோது, வருகிறேன் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டாராம். இதனால் அவர் இனி பிரசாரத்துக்கு வரமாட்டார் என்று கூறப்படுகிறது.இந்த தகவல் வெளியானதால் புதிய தமிழகம் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக-பாஜ கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி சேர்ந்ததால், ஓட்டப்பிடாரத்தில் கணிசமாக இருக்கும் புதிய தமிழகம் கட்சியில் உள்ள கிறிஸ்தவர்கள், கடும் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள், திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் கிருஷ்ணசாமியும் பிரசாரத்துக்கு வராமல் இருப்பதால், புதிய தமிழகம் கட்சியினர் தேர்தல் நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால், டெபாசிட் கிடைப்பதற்கே பெரும்பாடாகிவிடும் என்று அதிமுகவினர் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ministers ,Krishnasamy , Ministers canceled, Krishnaswamy, Ottapidaram,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...