×

சென்னை அருகே உள்ள ரிசார்ட்டில் போதையுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் 160 பேர் சுற்றிவளைப்பு: கஞ்சா, அபின் பறிமுதல், 12 பேர் கைது , ரிசார்ட்டுக்கு சீல் வைப்பு

சென்னை:  மாமல்லபுரம் அருகே தனியார் ரிசார்ட்டில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்கள், மது பாட்டில்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் அதிக சத்தத்துடன் பார்ட்டி நடப்பதாக, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி விஜயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தற்போது காஞ்சிபுரம் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி விடுமுறையில் உள்ளதால், திருவள்ளூர் எஸ்பி பொன்னிக்கு தகவல் கொடுத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்பி பொன்னி தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களில் தனியார் ரிசார்ட்டுக்கு நேற்று இரவு விரைந்தனர். அப்போது ரிசார்ட்டுக்கு வெளியே நின்றிருந்த 50க்கும் மேற்பட்ட கார்களில் போலீசார் சோதனை நடத்தினர்.இதன்பிறகு நள்ளிரவு 12.30 மணியளவில் விடுதிக்குள் நுழைந்த போலீசார், விடியற்காலை 3 மணிவரை அதிரடி சோதனை நடத்தினர். விடுதிக்குள் போலீசார் சென்றபோது அங்கு 160க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒலிபெருக்கியில் பாடல்களை போட்டு அதற்கு ஏற்றப்படி நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்தனர். அவர்களை ேபாலீசார் எச்சரித்தபோது வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் எஸ்கேப் ஆகாமல் இருக்க போலீசார் சுற்றிவளைத்தனர். பின்னர் ரிசார்ட்டை விட்டு தப்பி செல்லாதபடி, அதன் இருபக்க கதவுகளும் மூடப்பட்டது. இதன்பிறகு எஸ்பி பொன்னி, ஏடிஎஸ்பி சிலம்பரசன், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பராஜு உள்ளிட்டோர் போதையில் குத்தாட்டம் போட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.அப்போது அவர்கள், ‘‘தாங்கள் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் மூலம் நண்பர்களாக உள்ளதாகவும், அனைவருமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பதாகவும், விடுமுறை நாட்களில் ஜாலியாக பொழுதை கழிக்க வந்தோம்’’ என்றனர்.இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது. சிலரிடம் 10 கிராம், 30 கிராம் போன்ற அளவுகளில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த 153 ஆண்கள், 7 பெண்கள், 10 பவுன்சர்கள் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 12 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். 7 பெண்களை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து எஸ்பி பொன்னி கூறுகையில், ‘‘மாமல்லபுரம் அருகே தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக போதை பொருட்களை பயன்படுத்தி நடன ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல் கிடைத்தது. ஒருவேளை ரவுடிகளாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீசாருடன் சோதனை நடத்தினோம். இந்த சோனையில் எவ்வித அனுமதியுமின்றி மது மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்து, அதிகளவில் பணம் வசூலித்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பணம் வசூலித்தவர்களை கைது செய்துள்ளோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண்களை அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களுக்கு பெண்கள் தனியே வரும்போது, அவர்களுக்கு போதை பொருட்களை கொடுத்து, அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளது’’ என்றார். இதுபோல் பொள்ளாச்சியில் உள்ள தனியார் தோட்டத்தில் மதுபோதையில் குத்தாட்டம் நடத்தப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் சென்று, அங்கு போதையில் நடனமாடிய பெண்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டவர்களை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

160 பேரில் 12 பேர் கைது
குத்தாட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜார்ஜ், பிரபு, அருள் கார்த்திக், சரவணகுமார், இர்பான், லிக்கி தேவதயா, அனீஷ், கார்த்திக், வேலு ஆகியோர் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், சிவ்சரண், ஹரி, ரிக்சாடா நெல்சன் ஆகியோர் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். மேலும், இதில் கலந்துகொண்ட போர்ச்சுக்கல் வாலிபர் ஒருவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பல ஆண்டுகளாக பார்ட்டி
கிழக்கு கடற்கரை சாலையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற குத்தாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போலீசாருக்கு மாமூல் வாங்கி கொண்டு அமைதியாக இருந்து விடுகின்றனர்.

கலெக்டர் அதிரடி
காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் பொன்னையா ரிசார்ட் குறித்து போலீசார் அளித்த அறிக்கையையடுத்து அந்த விடுதியை சீல் வைக்க நேற்று இரவு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து விடுதி மூடப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,resort ,Kanja, Opin seizure ,Chennai , Chennai, drugs, youth, canja, opium, confiscation,
× RELATED கொடைக்கானலில் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர் சங்க கூட்டம்