×

கன்னியாகுமரியில் ஆக்ரமிப்பாளர்கள் ஆதிக்கம்: பகவதியம்மன் கோயிலை தேடி அலையும் பக்தர்கள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கோடை சீசன் என்பதால் தற்போது தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் சூரியன் உதயம் அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கின்றனர். கடல் நடுவே உள்ள திருவள்ளுவர்சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகிய இடங்களை படகில் சென்று பார்க்கின்றனர். பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.  திரிவேணி சங்கமத்தில் குளித்து மகிழ்கின்றனர். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க இடம், இயற்கை அதிசயம் ேபான்றவையாக இருப்பதால் வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணிகள் இங்கிருக்கும் சூழலை பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக முகம் சுளிக்கும் சூழ்நிலையே நிலவி வருகிறது. சர்வதேச அதிசயமான மூன்று மகாசமுத்திரங்கள் சந்திக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை சுகாதாரக்கேட்டை பரப்பும் நிலையிலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது.

கடற்கரையில் கொட்டப்படும் கழிவுகளாலும், சுகாதாரமற்ற முறையிலும், கொள்ளை விலையிலும் விற்கப்படும் தின்பண்டங்கள், மாங்காய், கொய்யா உள்ளிட்டவற்றாலும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதியடைகின்றனர்.
 இதை தட்டி கேட்கும் சுற்றுலா பயணிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டுவது, அடிக்க பாய்வது போன்ற செயல்களில் வியாபாரிகளும், அவர்களது ஆதரவாளர்களும் ஈடுபடுவதால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இங்கு, அரசு அதிகாரிகளை விட ஆக்ரமிப்பாளர்களின் ஆதிக்கமே மிக அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ரமிப்புகளால் கடற்கரைக்கு செல்லும் பாதையில் கடும் நெருக்கடி நிலை இருந்தது. பேரிடர் காலங்கள் அல்லது கடற்கரையில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் என அவசர கால வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி அறநிலையத்துறை நிலத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த 50 கடைகள், பேரூராட்சி நிலத்தில் கட்டப் பட்டிருந்த 20 கடைகள் என 70 கடைகள் இடித்து அகற்றப்பட்டு கடற்கரைக்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஆக்ரமிப்பாளர்களின் ஆதிக்கம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. கடற்கரைக்கு செல்லும் பாதையில் கரும்புச்சாறு இயந்திரம், ஐஸ்கிரீம் பார்லர் என கடைகள் அமைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்போது அங்கும் இங்கும் செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது. அதோடு அவசரகால வாகனங்கள் கடற்கரைக்கு செல்லவே முடியாத நிலை உள்ளது. இதை அறநிலையத்துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை. ஆக்ரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே இத்துறைகளின் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். கன்னியாகுமரியில் மிக முக்கியமானது பகவதியம்மன் கோயில்.

இங்கு புதிதாக வரும் பக்தர்கள் கோயில் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அலையும் நிலை உள்ளது. கோயில் குறித்த தகவல் பலகையும் எந்த இடத்திலும்  வைக்கப்படவில்லை. அதோடு சன்னதி தெருவில் ஆக்ரமிப்பு காரணமாக கோயில் இருக்கும் இடமே தெரிவதில்லை. இந்த நிலையில் சன்னதிெதருவில் பகவதியம்மன் கோயில் நிர்வாக  கட்டுப்பாட்டில் பத்ரகாளியம்மன் கோயில் என்ற சக்தி பீடம் உள்ளது. இந்த கோயிலின் முன் பகுதி முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டபோது இந்த ஆக்ரமிப்புகளும் அகற்றப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி  அடைந்தனர். ஆனால் தற்போது மீண்டும் ஆக்ரமிப்பாளர்கள் கோயிலை முழுமையாக  மறைத்து கடைகள் கட்டியுள்ளனர். பக்தர்கள் புகார் அளித்தும் அறநிலையத்துறை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இயற்கை அதிசயம் நிறைந்த கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக மட்டுமல்ல பிரசித்தி பெற்ற ஆன்மீக பூமியாகவும் உள்ளது. ஆனால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் தொல்லைகளும், ஆபத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஒருமுறை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மறுமுறை இங்கு வர தயங்குகின்றனர். இது கன்னியாகுமரிக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, எதிர்காலத்தில் கன்னியாகுமரியில் சுற்றுலா முற்றிலும் அழியும் ஆபத்தையும் ஏற்படுத்தும். எனவே சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, காவல் துறை, ேபரூராட்சி நிர்வாகம் என அனைத்து துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கன்னியாகுமரியில் ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதுகாப்பான, சுகாதாரமான தின்பண்டங்கள் விற்பதையும், சுற்றுலா பயணிகள் கண்ணியமாக நடத்தப்படுவதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Agnipotians ,devotees ,Kanyakumari ,Bhagavathi Amman Temple , Kanyakumari, Agrammaiyar, Bhagavadyamman Temple
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...