×

ஆறுமுகநேரியில் பரபரப்பு சம்பவம் பாலத்தில் பறந்து சென்று 20 அடி கால்வாயில் பாய்ந்த கார்

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் நேற்று பாலத்தில் பறந்து சென்று 20 அடி கால்வாயில் கார் ஒன்று பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வியாபாரி குடும்பம் காயமின்றி உயிர் தப்பினர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி வட பகுதியில் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூருக்கு செல்வதற்கு வசதியாக தனியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் போலீஸ் செக்போஸ்ட்டும் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கால்வாயில் 8 கண் பாலம் ஒன்று உள்ளது. மழை காலங்களில் இந்த பாலத்தின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்கும். தற்போது கோடை நேரம் என்பதால் அந்த கால்வாய் வறண்டுபோய் மணலாக காட்சியளிக்கிறது.
 பாலம் உள்ள கால்வாய் 50 அடி அகலம் 20 அடி ஆழம் கொண்டது. விபத்து எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பாலத்தின் இருபகுதியிலும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 2.30 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து வந்த கார் ஒன்று பாலத்தின் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் பறந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கால்வாய்க்குள் பாய்ந்தது.இதனை அந்த பகுதியில் நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். சினிமாவில் பறப்பதுபோல் பறந்த கார் கால்வாயில் கவிழாமல் நின்றது. அந்த நேரம் பார்த்து ரோந்து வந்த ஹைவே பெட்ரோ போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் போலீசார் முன் வந்து நின்று, நாங்க மதுரைகாரங்க. தூத்துக்குடியில நடந்த வணிகர் மாநாட்டில் கலந்து கொண்டோம். காரில் என்னுடன் மனைவியும் மகளும் வந்தனர்.திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லலாம் என புறப்பட்டு வந்தோம். ஆனால் கார் திடீரென்று இப்படி காலை வாரி விட்டது. ஆனா எங்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று வியாபாரி விளக்கம் அளித்தார். அவரது பின்னால் மனைவி மற்றும் 13 வயது மகள் நின்றுகொண்டிருந்தனர்.

போலீசில் புகார் எதுவும் கொடுக்கிறீங்களா? என்று போலீசார் கேட்டதற்கு, வேண்டாம் சார் காரின் முன்பகுதி பேனட் மட்டும்தான் உடைந்துள்ளது. மற்றபடி சேதம் ஒன்றுமில்லை. நாங்கள் ேகாயிலுக்கு போய்விட்டு ஊருக்கு கிளம்புறோம் என்று வியாபாரி கூறிக்கொண்டிருந்தார். அப்போது 2 பேர் பாலத்தின் அடியில் இருந்து ஓடிவந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும், என் ஆட்டுக்கு ஒரு பதில் சொல்லாமல் இவர்களை விடமாட்டோம் என்றனர். என்னவென்று போலீசார் விசாரித்தபோது, இவரது கார் கால்வாயில் விழுந்தபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த என் ஆட்டின் காலை நசுக்கிவிட்டது. அதற்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றனர். இதையடுத்து அந்த வியாபாரி ஒரு தொகையை ஆடு மேய்க்கும் தொழிலாளிகளிடம் கொடுத்தார். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. அதன்பிறகு வியாபாரி தனது குடும்பத்துடன் சேதமான காரிலேயே திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,canal ,Arumuganal ,bridge , Canal, car
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்