×

காவல்துறை அலட்சியம்: குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் போலீஸ் மாவட்டத்திற்குட்பட்ட அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் நிலையங்களில் குற்ற சம்பவங்களும் சட்ட விரோத செயல்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறியதாவது: சென்னையின் மிக முக்கிய போலீஸ் நிலையங்களாக கருதப்படும் அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, மூன்று இடங்களிலும் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தனியார் நிறுவனங்களும், கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. எல்லா  நேரங்களில் மக்கள் அதிகமாக சென்று வரக்கூடிய முக்கிய சாலையாக இந்த பகுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தொடர் கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர் பட்டாக் கத்திகளுடன் மக்களை மிரட்டி வருகின்றனர். மேலும்,  சாலையிலேயே விரட்டி அரிவாளால் வெட்டியும் நகை, பணம்,  செல்போன் பறிக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் போலீசார்,  சரியான முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை, உளவு பிரிவு போலீசார் நீண்டகாலமாக ஒரே போலீஸ் நிலையங்களிலிருந்து வருவதாலும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா நகரில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் சுமார் 100 பவுனுக்கு மேல் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

போலீசாருக்கு சவால் விடும் வகையில் கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் எடுத்துச் செல்கின்றனர். இதுவரையில், எந்த வழக்கிலும் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா வைப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் போலீசார்  குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crime incidents , Police negligence: Increase of crime incidents
× RELATED தினமும் மாலையில் குற்ற சம்பவங்களை...