×

திருமயத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு பஸ் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருமயம்: திருமயத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவுப் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் முக்கிய சுற்றுலாதலமாகும். மேலும் விராச்சிலை, கடியாபட்டி, ராயவரம், இளஞ்சாவூர், மேலூர், ராங்கியம், வாரியப்பட்டி, துளையானூர், குளத்துப்பட்டி, ஊனையூர், கொசப்பட்டி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரைக்குடி, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பஸ் ஏற திருமயம் வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு சென்னைக்கு செல்ல தனியாக பஸ் இல்லாத நிலையில் திருமயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து 2004ம் ஆண்டு திருமயத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இது திருமயம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்னர் திருமயத்தில் போக்குவரத்து பணிமனை வசதி இல்லாததை காரணம் காட்டி அதிகாரிகள் திருமயத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ்சை நிறுத்திவிட்டு காரைக்குடி பணிமனையில் இருந்து திருமயம் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் பஸ்சில் திருமயம் பகுதி மக்கள் சென்னை செல்லலாம் என தெரிவித்தனர்.

இதனிடையே காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் திருமயம் பயணிகளை ஏற்றுவதற்கு போதுமான இருக்கைகள் இல்லாததால் பொதுமக்களுக்கும், நடத்துனருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதால் திருமயத்திற்கு வராமல் பைபாஸ் சாலை வழியாக பஸ் இயக்கப்பட்டது. இருந்த போதிலும் ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் இடம் இருந்தால் அந்த பஸ்சில் ஏறி திருமயம் பயணிகள் சென்னைக்கு சென்று வந்தனர். மேலும் சிலர் புதுக்கோட்டை, திருச்சி வரை நகர பஸ்சில் சென்று அங்கிருந்து சென்னை செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியிலிருந்து திருமயம் வழியாக செல்லும் கரைக்குடி சாலை பைபாஸ் சாலையாக மாற்றப்பட்டது. இந்த பைபாஸ் சாலை திருமயத்திற்கு புறவழிச்சாலையாக அமைந்தது. இதனால் சென்னை பஸ்கள் பைபாஸ் சாலையில் சென்றுவிடுகின்றனர். அதேசமயம் திருமயம் பயணிகளுக்காக காரைக்குடி பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட சென்னை பஸ்சும் வாரத்தின் முக்கிய நாட்களில் பஸ்சில் உள்ள இருக்கைகள் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாக காரணம் காட்டி திருமயம் பயணிகளை தவிர்த்து பைபாஸ் சாலையில் சென்று விடுகின்றனர். இதனால் திருமயம் பயணிகள் சென்னை செல்ல பெரும் சிரமப்படுவதுடன் பணம், நேரம் விரையமாவதாக திருமயம் பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் சுற்று வட்டார பகுதிகளின் நலன் கருதி திருமயத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவுப் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state ,Thirumayam ,Chennai , Thirumayam, Chennai, Government Bus
× RELATED திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது