×

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல்: பள்ளி கட்டிடங்களுக்கு தீவைப்பு!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக  நடக்கிறது. 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 51 மக்களவை தொகுதிகளில் ஐந்தாவது கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப்  பிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மேற்கு வங்கம் 7, மத்தியப்பிரதேசம் 7, பீகார் 5, ஜார்கண்ட் 4, காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்துவருகின்றனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒருசில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், ஒரு வாக்குச்சாவடியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரஹ்மூ பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் சோபியான் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் இருந்த 2 பள்ளி கட்டிடங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அதேபோல், புல்வாமாவின் த்ரால் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த குண்டானது சிறிது தூரம் தள்ளி விழுந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,school buildings ,Kashmir ,Pulwama , Kashmir, Pulwama, polling, grenade Attack, Lok Sabha polls
× RELATED மூணாறில் களைகட்டத் தொடங்கிய கோடை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி