ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை மே மாதம் 30-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ள மேலும் அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு


2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி  முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட இந்த அனுமதி குறித்து சிபிஐ , அமலாக்கப்பிரிவினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.600 கோடி அளவிலான அன்னிய முதலீடுகளுக்கு மட்டுமே நிதி அமைச்சகம் நேரடியாக அனுமதி அளிக்க முடியும்.

அதற்கு மேலான தொகைக்கு பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவைக் குழுதான் அனுமதி அளிக்க முடியும். ஆனால், இதை மீறி  அனுமதி அளிக்கப்பட்டதாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டுகின்றன.இந்த அனுமதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டதாகவும், கட்டணமும் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் தனித்தனியாக வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி மனு

இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் இருவரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை மே மாதம் 30-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தடை விதித்தது. இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ள மேலும் அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டது. முன்னதாக ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி 28ம் தேதி சென்னை விமான நிலையத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கார்த்தி சிதம்பரத்திற்கு கடந்த 23ம் தேதி டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை  அடுத்து தற்போது கார்த்தி பிணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : ப.சிதம்பரம்