×

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு சாக்கடை கால்வாயில் விழுந்த தந்தை, மகன் படுகாயம்

பட்டிவீரன்பட்டி : சித்தரேவு ஊராட்சியில் உள்ள கடைவீதி, செக்கடி தெரு, வடக்குத் தெரு, கோட்டைபட்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தெருக்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டபோது சாக்கடை கால்வாய்களை உயர்த்திக்கட்டவில்லை. இதனால் சிமென்ட் ரோட்டுக்கு கீழ் பல அடி பள்ளத்தில் சாக்கடை கால்வாய்கள் உள்ளன.

வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இந்த ஊரில் உள்ள முக்கிய வீதிகளில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் சாக்கடைகள் தெருக்களின் சந்திப்புகளில் அடியில் அடைத்துக் கொள்கின்றன. இந்த சாக்கடை கால்வாயை உயர்த்திகட்டாமல் தற்காலிகமாக ஊராட்சி நிர்வாத்தினர் சிமென்ட் ரோட்டை ஊரின் பல இடங்களில் உடைத்துள்ளனர். இதனால் சிமென்ட் ரோட்டின் பல பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்ய வேண்டி பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இப்பகுதி பொதுமக்கள் மனுக்கொடுத்தும் இதற்கான நடவடிக்கைளை ஊராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.
இதனால் நேற்று முன்தினம் இரவு சித்தரேவு கடைவீதியில் டூவீலரில் வந்த முருகன், அவரது மகன் முகேஸ்பாண்டி ஆகிய இருவரும் இந்த சாக்கடை பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தனர். சாக்கடையில் விழுந்த தந்தை மகனை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சாக்கடை நீரில் நனைந்த இருவரையும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அருகிலிருந்த மருத்துவனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சித்தரேவைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், ‘தினமும் தோண்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் பலர் விழுந்து காயமடைகின்றனர். இதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. வரியை மட்டும் பலமடங்கு உயர்த்தி உள்ளனர். ஆனால் வளர்ச்சி பணிகள் என்பது துளியளவும் நடைபெறவில்லை. உயிர்பலி ஏற்படும் முன்பாக இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pattiveeranppatti , pativeeranpatty,son,father ,sewage canal ,sithravu
× RELATED பட்டிவீரன்பட்டி அருகே காட்சி பொருளாக...