×

பொள்ளாச்சி ரிசார்ட்டில் போதையில் ஆபாச நடனம் ரஷ்ய வாலிபர் உட்பட 14 பேர் சிறையில் அடைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பண்ணை தோட்டத்தில் அனுமதி பெறாத ரிசார்ட்டில் போதையில் பெண்ணுடன்  ஆபாச நடனமாடிய விவகாரத்தில் ரஷ்ய இளைஞர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சேத்துமடையில் கணேஷ்  என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் இங்கு ஒரு பெண்ணுடன் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆபாச நடனம்  ஆடினர். அவர்கள் அனைவரும் மது மற்றும் போதை மாத்திரைகள்  பயன்படுத்தியிருந்தனர். தகவலறிந்து போலீசார் சேத்துமடைக்கு சென்று அங்கிருந்த 165 பேரையும் வேனில் ஏற்றி  அங்குள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, போதை பொருட்கள் பயன்படுத்தியதாக 14 பேரை ஆனைமலை போலீசார் கைது  செய்தனர். ரிசார்ட் உரிமையாளரான சேத்துமடையை சேர்ந்த ஜெய்  கணேஷ் (45), அதே பகுதியை சேர்ந்த வருண் பிரதீப் (25), ரஷ்யாவை  சேர்ந்த லிசோரின்(30), ஆனைமலை கமல் (27), கருப்பசாமி (25), திருச்சூரை  சேர்ந்த அர்ஜூன் ஆனந்த் (23), கொச்சின் ஜெரின் (23), பாலக்காட்டை  சேர்ந்த விஷ்ணு விஜயன் (23), துடியலூரை சேர்ந்த முகமது சானிப் (28),  முகமது ஆசிக் (25), டெல்லியை சேர்ந்த கரன்டால்வர் (34), கோவை  உக்கடத்தை சேர்ந்த முஜாமில் நசீர் (25) உட்பட 14 பேர் கைது  செய்யப்பட்டனர்.

இதில் 18 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள்  பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.  ரஷ்ய நாட்டை சேர்ந்த லிசோரின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற  11 பேரும் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள்  மீது போதை பொருள்  தடுப்பு சட்டம் (என்டிபிஎஸ்) 1983 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு  பதியப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து கஞ்சா, போதை மாத்திரை, ஹசீஸ் ஆயில், டிரக் பவுடர் மற்றும் கஞ்சா  புகைக்க உதவும் கருவிகள், சொகுசு கார்கள் 3 உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் கூடி போதையில் நடனமாடிய பொள்ளாச்சி கமலா முத்து நகரை  சேர்ந்த நவீன் வெங்கடேஷ் உள்பட 97 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து விலை  உயர்ந்த வெளிநாட்டு மது உட்பட 34 மதுபாட்டில்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. இவர்கள் மீதும் வழக்கு  பதியப்பட்டுள்ளது.ரிசார்ட்டில் அதிக ஒலியுடன் ஸ்பீக்கரில்  பாடல் போடடு அருகில் வசிப்பவர்களுக்கு இடையூறு செய்ததாக கேரள  வயநாட்டை சேர்ந்த ராகுல் (27) உள்பட 54 பேர் கைது செய்யப்பட்டு  ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு
 கோவை  எஸ்பி சுஜித்குமார் கூறுகையில், ‘‘கோவை மாவட்டம் முழுவதும் இது  போன்று அனுமதி பெறாமல் இயங்கும் ரிசார்ட், கேளிக்கை விடுதிகள்  குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இது போன்று போதையில்  ஆட்டம், பாட்டம், கேளிக்கை நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கிடைத்தது எப்படி? போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இணையதளங்கள்  மூலம் இணையும் இளைஞர்கள் அவ்வப்போது வெள்ளிக்கிழமை மாலை 6 மணி  முதல் சனிக்கிழமை அதிகாலை 6 மணி வரை இது போன்று ஒரு இடத்தில் ஒன்று  சேர்ந்து மது குடித்து கும்மாளமிடுவது வழக்கமாக இருந்துள்ளது.  அவர்கள் தென்னந்தோப்புக்கு நடுவில் உள்ள  ரிசார்ட்டுகளையே பயன்படுத்துகின்றனர். தற்போது சிக்கியுள்ள  இளைஞர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரு  சிலர் மட்டுமே தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களில் கல்லூரி மாணவர்களும் அடங்குவர்.

இவர்கள் ரிசார்ட்டில்  தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி இருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. அந்தப் போதைப் பொருட்கள் அனைத்தும் மாத்திரை  வடிவில் இருந்தன.
இளைஞர்களுக்கு தடைசெய்யப்பட்ட போதைப்  பொருட்கள் எப்படி கிடைத்தது? என்பது சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.  இந்த ரிசார்ட் பல வருடங்களாக அனுமதி பெறாமல்  நடத்தப்பட்டுள்ளது. ரிசார்ட் நிர்வாகத்தினர்தான்  இளைஞர்களுக்கு உணவு மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்ததாக  சந்தேகிக்கப்படுகிறது. அதன்பேரில் விசாரணை நடத்தப்படுகிறது. கலெக்டரின் உத்தரவுப்படி இந்த ரிசார்ட்டுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அனுமதி பெறாத ரிசார்ட்டுகள்  ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வட்டாரப் பகுதிகளில்  செயல்படுகிறதா? என சோதனை செய்து வருகிறோம்.
இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teenager ,Russian ,resort ,Pollachi , Pornography , Pollachi Resort, Including , Russian youth,jail
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...