×

தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் நீதிபதி பாப்டேயை 2 நீதிபதிகள் சந்தித்ததாக வந்த தகவல் தவறு : உச்ச நீதிமன்றம் விளக்கம்

புதுடெல்லி: தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும் மூத்த நீதிபதி பாப்டேயை, நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட் ஆகியோர் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக மீடியாவில் வெளியான தகவல் உண்மையில்லை என  உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது தொடர்பாக, மூத்த நீதிபதி பாப்டே, பெண் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா  மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை மிக ரகசியமாக நடத்தப்படுகிறது.

3 நீதிபதிகள் மற்றும் புகார் கொடுத்த பெண் மட்டுமே விசாரணை அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த முறை விசாரணையின்போது, தனது வக்கீலுக்கும் அனுமதி வழங்கக் கோரி புகார் கொடுத்த பெண் வலியுறுத்தினார். அவரது  கோரிக்கை ஏற்கப்படாததால், இந்த அமர்வின் மூலம் தனக்கு நியாயம் கிடைக்காது எனக் கூறி விசாரணையில் இருந்து அவர் விலகினார்.இப்படிப்பட்ட நிலையில், நீதிபதி பாப்டேயை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பட்ட முறையில் சந்தித்து, தலைமை நீதிபதி மீதான புகார் குறித்து ஆலோசித்ததாக ஆங்கில பத்திரிகை ஒன்று  நேற்று செய்தி வெளியிட்டது. இந்த சந்திப்பின்போது, நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வக்கீல் ஒருவரை ஆலோசகராக நியமிக்கலாம் என 2 நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விசாரணை ஒருதலைபட்சமாக அமைந்து விடக்கூடாது என்றும் 2  நீதிபதிகள் வலியுறுத்தியதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நீதிபதி பாப்டேயை நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட் ஆகியோர் சந்தித்ததாக முன்னணி பத்திரிகை கூறியிருப்பது துரதிஷ்டவசமானது. இது முழுக்க, முழுக்க தவறான செய்தி. தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் வேறெந்த நீதிபதிகளின் ஆலோசனைகளை பெறுவதில்லை. சுயமாக ஆழ்ந்து விசாரித்து வருகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bapte , Chief Justice,complaint,Judge Baptist , Supreme Court
× RELATED உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக...