×

அண்டை மாநிலங்களை பார்த்தாவது மாறுமா தமிழகம்? 39,000 குளங்கள் இருந்தும் சொட்டு நீர் கூட சேமிக்கவில்லை: எங்கும் ஆக்கிரமிப்பு, எதிலும் அலட்சியப் போக்கு

சென்னை: நாட்டின் மக்கள்தொகையில் 7 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகத்திற்கு நாட்டின் நீர்வளத்தில் 3 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. மாநிலத்தின் நீர்வளம் மழையை மட்டுமே நம்பி உள்ளது. 39 ஆயிரம் குளங்கள் இருந்தும் சேமிப்பு என்பது இன்னமும் பெரும் கேள்விக்குறி தான். அண்டை மாநிலங்களை பார்த்தாவது தமிழகம் இனியாவது விழித்து கொள்ள வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் ஆதங்கம். தமிழகத்தின் உட்பகுதிகளில் 848 மி.மீ. முதல் 946 மி.மீ. வரை மழை பொழிகிறது.

கடற்கரைச் சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும் 1,666 மி,மீ. வரை மழை பெய்கிறது. 2 பருவமழைகளை தமிழகம் பெறுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவ மழையாலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வடகிழக்குப்பருவ மழையாலும் தமிழகத்திற்கு மழை நீர் கிடைக்கிறது. தமிழகத்திற்கு கிடைக்கும் நீரில் வடகிழக்கு பருவ மழையின் பங்கு 46 சதவீதம். தென்மேற்கு பருவ மழையின் பங்கு 35 சதவீதம். கோடை மழை 14 சதவீதம் நீரை அளிக்கிறது. குளிர்காலத்தில் 5 சதவீதம் நீர் கிடைக்கிறது.

நிலத்தடி நீரையும் சேர்த்து தமிழ்நாட்டின் நீர்வளம் 46,540 மில்லியன் கன மீட்டராகும். (1,643 டிஎம்.சி.). நில மேற்பரப்பு நீரின் அளவு 24,160 மில்லியன் கனமீட்டர் (853 டி.எம்.சி.) இதில் மற்ற மாநிலங்களில் இருந்து கிடைக்கும் 7391 மில்லியன் கன மீட்டரும் அடக்கம் (261 டி.எம்.சி.). தமிழ்நாட்டின் மிகப் பெரிய பிரச்னையே பெய்யும் மழை நீரைச் சேமிப்பதுதான். ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கக்கூடிய 46,540 மில்லியன் கனமீட்டர் நீரில் நில மேற்பரப்பில் ஓடும் நீரின் அளவு ஏறக்குறைய பாதியாக இருக்கிறது.

தமிழகத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் 20,413 குளங்கள் உள்ளன. அதேபோல் மாநில அரசின் பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தில் சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் 8,902 குளங்கள் உள்ளன. தனியார் குளங்கள் 9,886 உள்ளன. இதில் என்ன தான் பிரச்னை? அரசில் உள்ள கட்டமைப்பு சீர்குலைவுதான். அது நீர்வரத்து பகுதிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, நீர்த்தேக்கம் பரப்பின் பாதிப்பு, பாசனப் பரப்பின் சீர்குலைவு, மறுகால், பாசன கால்வாய்கள் சீர்குலைவு, குளத் தொடர்களின் சீர்குலைவு போன்வற்றை கட்டமைப்பு சீர்குலைவு  என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் மேலாக அமைச்சர்கள், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு. இந்த 39,000 குளங்களை சீரமைத்து மழை நீரை சேமித்தாலே போதும்; மாநிலத்தில் குடிநீர், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் ஆதாரம் கிடைக்கும். இதற்கு மக்கள் ஒன்று திரண்டு ஓர் இயக்கம் நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள குளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் மக்களின் ஒத்துழைப்புடன் 100 நாள் வேலைதிட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்கள், கால்வாய்கள், நீர் வழித்தடங்கள் ஆகியவற்றை மக்களின் பங்களிப்புடன் செய்தால் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பதே இருக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


குளங்களை சீரமைத்து மழை நீரை சேமித்தாலே போதும்; மாநிலத்தில் குடிநீர், பாசனத்திற்கு தேவையான தண்ணீர் ஆதாரம் கிடைக்கும்.

* ஆந்திரா: நீர் நிலைகளை பராமரித்து நிலத்தடி நீரை குறையாமல் பார்த்துக் கொள்வதோடு, மக்களுக்கு குடிநீர், விவசாயத்திற்கு தேவையான பாசன நீரை வழங்குவதில் அதிக அக்கறை செலுத்துகிறது மாநில அரசு. மக்களின் பங்களிப்பாலும், அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசுகளால் இது சாத்தியமாகிறது.

* கேரளா: சுற்றுச்சூழல், வனம், இயற்கை வளம் ஆகியவற்றை பாதுகாப்பதில் கேரள மக்களுக்கு நிகர் அவர்களே. இதனால்தான் நதிகளில் மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளுவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் அமைதி பள்ளத்தாக்கில் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மதிப்பளித்து அணை கட்டுவதை நிறுத்தினார் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி.

* கர்நாடகா: கிடைக்கும் தண்ணீரை சேமித்து மக்களுக்கு தடையின்றி குடிநீர், விவசாயத்திற்கு தேவையான பாசன நீரை வழங்குகிறது கர்நாடக அரசு. மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் அரசுகள் ஆட்சியில் அமர்வதால் இது சாத்தியமாகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states ,Tamil Nadu ,everywhere , Neighboring state, view, variant, tamil
× RELATED ஒரு விரல் புரட்சியே… மக்களவைத்...