×

ஆம்பூரில் தண்டவாளத்தை கடந்தபோது ஒரே குடும்பத்தில் 3 பேர் ரயில் மோதி பரிதாப பலி

ஆம்பூர்: ஆம்பூரில் நேற்று காலை தண்டவாளத்தை கடந்த தொழிலாளி, பாட்டி, பேரன் ஆகியோர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னக்கரும்பூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (40), ஷூ கம்பெனி தொழிலாளி. இவரது அக்காள் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு சத்தியாநகரை சேர்ந்த துரை  மனைவி பானுமதி (50). இவரது  பேரன் நித்திஷ் (7).  சங்கரின் சகோதரர் அனுமுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்துவர சங்கர், பானுமதி இருவரும் பேரன் நித்திஷூடன் நேற்று காலை  ஆம்பூர் ரயில் நிலையம் வந்தனர்.  ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு நடைமேடை வருவதற்காக தண்டவாளத்ைத கடக்க முயன்றனர். ஒரு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை தாண்டி  மற்றொரு தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது, மங்களூரில்  இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயில், வேகமாக வந்துகொண்டிருந்தது. இதை கவனிக்காமல் சென்ற 3 பேர் மீதும் ரயில் பயங்கரமாக மோதியது. இதில் மூவரும் தூக்கிவீசப்பட்டு  பரிதாபமாக உயிரிழந்தனர். சிறிதுதூரம் உடல் பாகங்கள் இழுத்துச்செல்லப்பட்டன. பயணிகள் கண்ணெதிரே நடந்த இந்த பயங்கர சம்பவத்தை கண்டு அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் வந்து 200 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 3 பேரின் உடல்  பாகங்களை சேகரித்தனர். தொடர்ந்து அவற்றை மூட்டைகளாக கட்டி பிரேத பரிசோதனைக்காக  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : railway station ,Ambur , train , Ambur,one family, Train crash ,kills
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...