×

3 மாதத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும்: சேலத்தில் முதல்வர் பேட்டி

சேலம்: 3 மாதத்திற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் என சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக அவர் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம்  வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துகிறது. மாநில அரசு அல்ல. 3 மாதத்திற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும். அதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இருந்த காலத்திலேயே அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் துவக்கி வேட்புமனு பெறப்பட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. நடைபெற இருக்கும் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக.வுக்கு துரோகம் இழைத்து வெளியேறிய காரணத்தினாலே தவிர்க்க முடியாத  சூழ்நிலையில் இந்த தேர்தலை சந்திக்கின்ற  நிலையில் நாங்கள்  தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை பொறுத்த வரையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த வகையில், ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகள் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் கொடுத்தும், தேர்ச்சி  பெறாத நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் நிலையில் அரசு உள்ளது.மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் திறமையின் அடிப்படையிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுகிறார்கள். எந்த ஒரு மாநில அரசும் தானாக முன்வந்து வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்த  மாணவர்களாக விளங்குகின்றனர். பல்வேறு போட்டித்தேர்வுகளில் வேலைவாய்ப்பினை பெற்று வருகிறார்கள். தற்போது தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் என்கவுன்டர் குறித்து கூறமுடியாது.  அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாது. தேர்தல் விதிமுறைகளை தளர்த்திய பின்பு என்னென்ன பிரச்னைகள் என தெரிந்து கொண்டு நடவடிக்கை  எடுக்கப்படும். இயற்கை ஒத்துழைத்தால் குறிப்பிட்ட காலத்தில் தஞ்சாவூர் டெல்டா பாசன விவசாயிகளுக்கு மேட்டூர் அணை திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,Chief Minister ,Salem , Localization ,3 months , election, CM , Salem
× RELATED தேர்தல் வாக்காளர் அறிக்கை வெளியீடு