×

ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள். இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் நேற்று காணப்படவில்லை. இதையடுத்து நாளை முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன் அயூப் கூறியதாவது:

ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. தமிழகத்தில் பிறை தென்படவில்லை. எனவே 7ம் தேதி(நாளை) முதல் நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறும். ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நோன்பு 27ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், 30ம் நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். ரம்ஜான் பிறை நேற்று தென்படவில்லை. எனவே, நாளை முதல் இந்தியா முழுவதும் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்று இந்தியா ஹஜ் அசோஷியேசனின் பிரசிடென்ட் அபுபக்கர் அறிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramnan ,announcement ,Chief Gaji , Ramzan, fast, tomorrow, beginning
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...