×

சென்னை பூங்காக்களில் உரம் தயாரிக்க பழைய வாட்டர் டேங்குகள்: 129 இடங்களில் செயல்பாட்டுக்கு வந்தது

சென்னை: பூங்காக்களில் உரம் தயாரிக்க பழைய வாட்டர் டேங்குகளை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 5000 டன் குப்பை உற்பத்தியாகின்றன. இந்த குப்பை அனைத்தும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் வீடுகளிலிருந்து வரும் உணவு கழிவுகளை வைத்து சென்னை பூங்காக்களில் இயற்கை உரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இயற்கை கழிவுகள் மற்றும் உணவு கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 632 பூங்காக்களில் 393 பூங்காக்களில் உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் அங்கு இருக்கும் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர்த்து மீதம் உள்ள உரங்கள் தமிழக அரசின் தோட்டக்கலை துறைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த உரம் தயாரிக்க பழைய வாட்டர் டேங்குகளை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பூங்காக்களில் குழி தோண்டப்பட்டு அதில் உரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். அந்த குழியில் கான்கிரீட்டை கொண்டு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். இந்த செலவுகளை குறைக்க பழைய குடிநீர் டேங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை குடிநீர் வாரியத்திடமிருந்து ஒரு குடிநீர் டேங்க் ரூ.3ஆயிரத்திற்கு வாங்கப்பட்டது.
இதன்பிறகு அந்த பழைய டேங்குகளின் கீழ் பகுதி முழுவதுமாக அகற்றப்பட்டது. டேங்குகளுக்கு ஏற்ற வகையில் குழி தோண்டப்பட்டு அந்த டேங்குகள் வைக்கப்படும். இதன்பிறகு கழிவுகள் அனைத்தும் அந்த டேங்குகளில்
கொட்டப்படும்.

இந்த டேங்குகளை பயன்படுத்துவதால் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செலவு கணிசமான அளவு குறைந்துள்ளது. தற்போது 129 பூங்காக்களில் மட்டும்தான் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இனி சில மாதங்களில் மற்ற பூங்காக்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். தற்போது வரை 15 டன் உரம் தோட்டக்கலை துறைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து மூங்கில் தொட்டிகள் அமைத்து உரம் தயாரிக்கப்பட்டுவருகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உரம் உற்பத்தி செய்வது தொடர்பாக பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parks ,locations ,Chennai , Chennai park, manure, old, water tank
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு