×

ராஜிவ் பற்றிய மோடியின் சர்ச்சை பேச்சு ‘எல்லாம் முடிஞ்சு... கர்மா காத்திட்டிருக்கு’ ராகுல் கூலாக பதிலடி

புதுடெல்லி: ‘‘உங்கள் தந்தை ராஜிவ்காந்தி நம்பர்-1 ஊழல்வாதி’’ என்ற பிரதமர் மோடியின் ஆவேச பேச்சுக்கு, ‘‘எல்லாம் முடிஞ்சு போச்சு, கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது’’ என ராகுல் நிதானமாக பதிலடி கொடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘எனது நற்பெயரை களங்கப்படுத்துவதே ஒரே குறிக்கோள் என்பதை ராகுல் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். எவ்வளவுதான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினாலும், மோடியின் 50 ஆண்டுக்கால போராட்டத்தை திசை திருப்ப முடியாது. உங்களின் தந்தை (ராஜிவ்காந்தி) நேர்மையானவர், மிஸ்டர் கிளீன் என காங்கிரசால் சித்தரிக்கப்பட்டார். ஆனால் கடைசியில் அவரது வாழ்க்கை நம்பர்-1 ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது’’ என்றார்.

கடந்த 1980ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும், ராஜிவ்காந்தி ஊழல் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த புகாரை வைத்தே பிரதமர் மோடி பேசி உள்ளார். இதுகுறித்து ராகுல் நேற்று டிவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், ‘‘போராட்டமெல்லாம் முடிந்துவிட்டது. உங்களின் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் ஆழ்மனது கருத்தை என் தந்தை மீது திணிப்பதன் மூலம் உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. உங்களுக்கு என் அன்பும், அரவணைப்பும்’’ என நிதானமாக பதிலளித்துள்ளார். இந்த டிவிட்டை பலரும் பாராட்டி உள்ளனர்.


‘தோல்வி பயம் தெரிகிறது’

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி குறித்து பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பற்றிய பிரதமர் மோடியின் கருத்து, அவரது விரக்தியையும், தோல்வி பயத்தையும் காட்டுகிறது. இறந்தவர்களின் நல்லதைப் பற்றியே பேச வேண்டுமென்ற பண்டைய மெய்யறிவை பிரதமர் கேள்விப்பட்டுள்ளாரா? இறந்தவர்களைப் பற்றி தவறாக பேச எந்த மதமாவது அனுமதிக்கிறதா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Rajiv , Rajiv, Modi, controversy talk, Rahul, retaliate
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...