×

கே.எல்.ராகுல் அதிரடியில் பஞ்சாப் வெற்றி சிஎஸ்கே கடைசி ஆட்டத்தில் தோல்வி: ராசியான சென்னையில் நாளை களமிறங்குகிறது

சண்டிகர்: ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுலின் அதிரடியால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனாலும், நாளை சென்னையில் நடக்கும் குவாலிபயர்-1 சுற்றில் விளையாடும் வாய்ப்பை சிஎஸ்கே உறுதி செய்தது. மொகாலியில் நேற்று மாலை நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் டுபிளஸ்சி, வாட்சன் துவக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். வாட்சன் 7 ரன்னில் கரன் வேகத்தில் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டுபிளஸ்சி, ரெய்னா பொறுப்புடன் ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன் சேர்த்தது.

ரெய்னா (53 ரன்) கரன் வேகத்தில் வெளியேறினார். சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்ட டுபிளஸ்சி 96 ரன்னில் (4 சிக்சர், 10 பவுண்டரி) கரன் பந்தில் கிளீன்போல்டாகி சதத்தை தவற விட்டார். அம்பாதி ராயுடு (1), ஜாதவ் (0) இருவரும் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் ரன் வேகம் அதிகரிக்கவில்லை. சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. கேப்டன் டோனி 10 ரன் (12 பந்து), பிராவோ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் கரன் 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 171 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல், கிறிஸ்கேல் ஜோடி நல்ல தொடக்கத்தை தந்தது. ஒருமுனையில் கேல் நிதானமாக ஆட, ராகுல் அமர்க்களப்படுத்தினார்.

ஹர்பஜனின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியுடன், 2 சிக்சர் விளாசிய ராகுல் 19 பந்தில் அரைசதம் கடந்தார். 10.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 108 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் ராகுல் (71 ரன், 36 பந்து, 5 சிக்சர், 7 பவுண்டரி) ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். கேல் (28), அகர்வால் (7) இருவரையும் ஹர்பஜன் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்தார். பூரன் பொறுப்புடன் ஆடி 22 பந்தில் 36 ரன் சேர்த்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டது. கடைசி லீக்கில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும், 18 புள்ளிகளுடன் டெல்லியை விட அதிக ரன் ரேட் பெற்றதன் மூலம் முதல் 2 இடத்திலிருப்பதை உறுதி செய்தது. இதனால், ராசியான சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்க உள்ள குவாலிபயர்-1 சுற்றில் விளையாடுவதை சிஎஸ்கே உறுதி செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kings XI ,final ,CKK , K.L.Allam Action, Punjab winner, CKK defeat
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு