×

மனநல பாதிப்பு யாருக்கு? முற்றுகிறது கம்பீர்-அப்ரிடி மோதல்

புதுடெல்லி: கவுதம் கம்பீர், பாகிஸ்தான் அதிரடி வீரர் அப்ரிடி இடையிலான மோதல் முற்றுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அதிரடி வீரர்சாகித் அப்ரிடி சமீபத்தில் வெளியிட்ட ‘கேம் சேஞ்சர்’ என்ற தனது சுயசரிதையில் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்திருந்தார். ‘‘கம்பீருக்கு மனரீதியில் ஏதோ பிரச்னை இருக்கிறது. அவருக்கென்று தனிப்பட்ட சாதனைகளோ, ஆளுமைத்திறனோ கிடையாது’’ என்று சரமாரியாக விமர்சித்திருந்தார்.

அப்ரிடியின் இந்த கருத்துக்கு கம்பீர் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘அப்ரிடி, நீங்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற இந்திய அரசு மருத்துவ விசா வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு வாருங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன்,’’ என்று தெரிவித்திருந்தார். கம்பீர் கருத்து வெளியிட்ட சிறிதுநேரத்தில் அப்ரிடியும் பதிலுக்கு ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்.

அதில், ‘‘கம்பீர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இங்குள்ள மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சைக்கு உதவுகிறேன். எங்கள் அரசு இந்தியர்களை எப்போதும் வரவேற்கிறது. நான் கம்பீரை பாகிஸ்தான் வருமாறு அழைக்கிறேன். இங்கு வந்தால், அவருக்கு சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன்,’’ என்று குறிப்பிட்டுள்ளார். இருவரிடையே தொடரும் வார்த்தை மோதல்கள் இருதரப்பிலும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. கவுதம் கம்பீர் தற்போது பாஜ வேட்பாளராக டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.


‘ரன் என்னது, பேட் அவரது’

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து (இலங்கைக்கு எதிராக) தனது முதல் போட்டியிலேயே உலக சாதனை படைத்தவர் அப்ரிதி. இதுகுறித்து அவர் தனது சுயசரிதை புத்தகத்தில் கூறுகையில், ‘‘இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பேட்டை எங்கள் அணி வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிசிடம் கொடுத்திருந்தார். வக்கார் அந்த பேட்டை என்னிடம் கொடுத்தார். சச்சின் கொடுத்த அந்த பேட்டை வைத்துத்தான் போட்டிக்கு முன்னதாக பயிற்சி செய்தேன். போட்டியின் போதும் அந்த பேட்டை வைத்து விளையாடித்தான், அதிரடி ரன் குவித்து சதம் அடித்தேன்...’’ என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conflict ,Gambar-Afridi , Mental health, hiccups, gambi-abridi, collision
× RELATED இருதரப்பு மோதலில் 7 பேர் கைது