×

தன்னார்வ அமைப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்: வனிதா மோகன், அறங்காவலர், சிறுதுளி

நாடு முழுவதும் சுமார் 7.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட  நீர்நிலைகள் உள்ளன. மழையின்மை, போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால்,  நீர்நிலைகளில் தண்ணீரின் கொள்ளளவு  குறைந்து கொண்டே செல்கிறது. நீர்மேலாண்மை  மூலம் நீர்நிலைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். கோவையில் உள்ள 5 குளங்களில்  இப்போது  நீர் கொள்ளளவு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.  இந்த  பணிகளுக்கு சிறுதுளி அமைப்புடன் சேர்ந்து, பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள் உதவிபுரிந்துள்ளன. மேலும், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அனுமதியுடன், கோவை மாவட்டத்தில் 46  குளம், குட்டைகள் தூர்  வாரப்பட்டுள்ளன. நீர்வரத்து வாய்க்கால்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கும் வகையில், சிற்றோடைகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.  நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை பணிகள் மூலம் நிலத்தடி  நீர்மட்டம் வெகுவாக உயரும். இதன்மூலம், விவசாயம் பெருகும். தண்ணீர் பிரச்னை தீரும். நீர்நிலைகளை பராமரிப்பது, பாதுகாப்பது தமிழக அரசின்  பொதுப்பணித்துறையை சார்ந்தது. . தன்னார்வ அமைப்புகள் தலைமையில், அந்தந்த பகுதி மக்கள் களம் இறங்கினால், நீர்நிலைகள் பராமரிப்பு என்பது மிகவும் எளிதான காரியம். ஆக்கிரமிப்பு, கழிவுகளை கொட்டுதல், கழிவுநீர் கலப்பு ஆகிய  மூன்றையும் தடுத்தால், தண்ணீர் வளம் பெருகும். சுத்தமான தண்ணீர் நம் வருங்கால தலைமுறைக்கு கிடைக்கும்.

  நம்மிடம் இல்லாத வளங்களே இல்லை; ஆனால், அதை பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஏன் கண்காணிக்கவும் போதுமான கவனம் இல்லை. அரசு மட்டுமின்றி, நாமும் கைகொடுக்க வேண்டும். மக்கள் சார்ந்த  அமைப்புகள் எல்லாம்  இறங்கினால், நம்மால் எதிர்காலத்துக்கு தண்ணீரை சேமிக்க முடியும். ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான நடவடிக்கை நிச்சயமாக தேவை.  நம்மைவிட மக்கள்தொகை குறைவாக உள்ள பல நாடுகளில் நீர்நிலைகளை அவ்வளவு அழகாக பராமரிக்கிறார்கள். நாமும், சுயவிருப்பத்துடன் களம் இறங்கினால் வெளிநாடுகளைவிட சிறப்பாக நமது நீர்நிலைகளை பராமரிக்க முடியும். மக்கள்  பங்களிப்புடன் சேர்ந்து, குளம், குட்டைகளை ஒருமுறை மட்டும் தூர்வாரினால் போதாது. அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பு ஆகியவற்றை தடுத்தால் கோடைக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு  என்ற பேச்சுக்கே இடமிருக்காது. யார் செய்தால் நமக்கென்ன என்ற மனப்பான்மை கூடவே கூடாது.

 கோவையில் துவங்கி, கரூர் வரை 160 கி.மீ தூரத்திற்கு ெநாய்யல் ஆறு பாய்கிறது. நுங்கும், நுரையுமாக கரைபுரண்டு ஓடிய இந்த நொய்யல் ஆறு, தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் வறண்டு கிடக்கிறது. இவற்றை சீரமைத்து,  மீண்டும் வருடம் முழுவதும் தண்ணீர் பாயும் அளவுக்கு இந்த ஆற்றை புனரமைக்க, விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரித்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், சிறுதுளி உள்பட 7 தன்னார்வ அமைப்புகள் ஒன்றுசேர்ந்து  நொய்யல் ஆற்றை புனரமைக்க உள்ளன.
 இதேபோல், மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறு, குளம், குட்டைகளை மக்கள் பங்களிப்புடன், தன்னார்வ அமைப்புகள் தூர்வாரி, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால், மழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைக்காலமாக  இருந்தாலும் சரி, தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தன்னார்வ அமைப்புகளின் இந்த செயல்பாட்டை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் தொடர்ந்து அவர்கள் தூர்வாரும் பணிகளில் ஈடுபடுவதற்கு  உந்துகோலாக இருக்கும். ஆக்கிரமிப்பு, கழிவுகளை கொட்டுதல், கழிவுநீர் கலப்பு ஆகிய மூன்றையும் தடுத்தால், தண்ணீர் வளம் பெருகும். சுத்தமான தண்ணீர் நம் வருங்கால தலைமுறைக்கு கிடைக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Vanita Mohan ,volunteer organizations , Volunteer , government,Vanitha Mohan, trustee, darling
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...