×

நீதிமன்றம் உரக்க மட்டுமல்ல, உரைக்க சொல்லி விட்டது நீர்நிலைகளை இனியாவது காப்பாற்றுமா அரசு?: மக்கள் இயக்கம் கையிலெடுப்பது காலத்தின் கட்டாயமா?

குடிநீருக்காக தெருத்தெருவாக அலைகின்றனர்; ஒரு குடம்  தண்ணீர் கிடைக்காதா, இன்றைய சமையல், குளியலை முடித்து விடலாம் என்று பதைக்கின்றனர்; தண்ணீர் லாரிக்கு ஏங்கி தவிக்கின்றனர்; இது சென்னையில் தினமும் காணும்  காட்சி மட்டுமல்ல, பல மாவட்டங்களில், அதிலும் கிராமங்களில் காணும் காட்சிகள் கண்ணீரை வரவழைக்கும். இதை நீதி தேவதை கூட அறிந்ததால் தான் உரக்கச் சொல்லி விட்டனர் நீதிபதிகள். ‘நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதை தடுத்து,  தண்ணீரை சேமிக்காவிட்டால்  எதிர்காலம் உங்களை மன்னிக்காது’ என்று உரக்க கூட சொல்லி விட்டனர். அரசுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், செல்வாக்கு படைத்தவர்களுக்கும் புரிந்ததா?  என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 7 லட்சம் ஹெக்டேர் நீர்நிலைகளில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. எல்லாமே,  அரசின் ஆதரவால், அதிகாரத்தால், உடந்தையாக இருந்ததால் ஏற்பட்ட கேடுகள். 2015 சென்னை வெள்ளம், நாம்  எந்த அளவுக்கு சேமிக்க அருகதையற்றவர்கள் என்பதை நிரூபித்து விட்டது. அந்த வெள்ள நீரை மட்டும் கடலுக்கு போகவிடாமல்  தடுத்து, சேமித்து வைத்திருந்தால் பல மாதங்களுக்கு  சென்னை தாகத்தில் தவித்திருக்காது.

ஆனால், இன்னமும் உரைக்கவில்லை உணர வேண்டிய அதிகாரம் படைத்தவர்களுக்கு. அரசை நம்பாத மக்கள் ஆங்காங்கு கிளம்பி விட்டனர்; நீர்நிலைகளை காக்க ஒரு இயக்கமாகவே நடத்துகின்றனர். இந்த இயக்கங்கள் இன்னும் பரவ  வேண்டும். நீர்நிலைகளை காப்பாற்ற அரசுக்கு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை நிறைவேற்றாதபட்சத்தில் மக்களே ஆங்காங்கு, பஞ்சாயத்துகளில் நீர்நிலை வரைபடங்களை வாங்கி தங்களின் நீர்நிலைகளை காப்பாற்ற தயாராக வேண்டும்  என்ற அளவுக்கு நிலைமை முற்றிக்கொண்டு போகிறது என்பதையும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டி விட்டனர்.  ஆனால், அரசு அசைந்து கொடுத்ததா? பக்கத்து மாநிலங்களை எல்லாம் பார்க்கும் போது நமக்கே வெட்கமாக இருக்கிறது. இந்த பக்கம் ஆந்திராவை இன்று பார்த்தால், கிடைத்த தண்ணீரை எல்லாம் எங்கெல்லாம் திருப்பி, விவசாயத்தை  காப்பாற்றலாம், மக்களுக்கு குடிநீராக தரலாம் என்று யோசிக்கிறது. அதை சாதித்தும் காட்டி வருகிறது. கர்நாடகாவை கேட்கவே வேண்டாம். கேரளாவும் சேமிப்பதில் திட்டங்களை வகுக்கிறது. இந்த மூன்று மாநிலங்களுமே, நீர்நிலைகள்  ஆக்கிரமிப்பு என்றாலே பெரும் குற்றமாக எண்ணுகின்றன. ஆனால், தமிழகத்திலோ, அரசே ஆக்கிரமிக்கும் அளவுக்கு மிகமோசமாக உள்ளது என்றால்...? தண்ணீர் நம் உயிர்த்துளி. இனியாவது சம்பந்தப்பட்டவர்களுக்கு உரைக்குமா?  என்பதே  மக்களின் ஆதங்கம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court , The court ,spoken,waters , Mandate?
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...