×

2.45 மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய இடத்துக்கு சென்னை விமான நிலையத்தில் 14 மணி நேரம் காத்திருந்த பயணிகள்: ரன்வேயில் மறியல் செய்வதாக மிரட்டல்

சென்னை: சென்னையில் இருந்து 2.45 மணிக்குள் சென்றடைய வேண்டிய பயண தூரத்துக்கு 14 மணிநேரம் பயணிகள் காத்திருந்த அவலம் விமான நிலையத்தில் நடந்தது.சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அதில் 154 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். இவர்கள் அனைவரும்  காலை 8.30 மணிக்கு விமான நிலையம் வந்து அனைத்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு காத்திருந்தனர்.
விமானத்தில் ஏறுவதற்காக போர்டிங் வாசலில் குறிப்பிட்டிருந்த 5வது வாசல் அருகே வந்தனர். ஆனால் விமானம் புறப்படும் தடம் மாற்றப்பட்டது, எனவே தரைத்தளத்தில் 11வது வழித்தடம் பகுதிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர்  அந்தப்பயணிகள் 9 மணிக்கு 154 பேரும் வந்தனர். விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, விமானம் தாமதமாக  11 மணிக்கு புறப்படும் என்று தனியாக ஒரு ஹாலில் அமரவைத்தனர். ஆனால் 11 மணிக்கு  விமானத்தின் இயந்திரக்கோளாறு இன்னும் சரிசெய்யவில்லை. எனவே, மதியம் 2 மணிக்கு புறப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த பயணிகள், விமானம் புறப்படும் நேரத்தை ஏன் மாற்றி மாற்றி  அறிவிக்கிறீர்கள் என்று கோஷம் எழுப்பினர். ஏர் இண்டியா அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி சிற்றுண்டி வழங்கினர்.

விமானத்தில் முக்கிய பாகங்கள் பழுதடைந்துள்ளன. அந்த பாகங்கள் டெல்லியில் இருந்து வரவழைக்க வேண்டும். எனவே, இரவு 8 மணி விமானத்தில் பழுதான முக்கிய ஸ்பேர் பார்ட்ஸ் வந்து விமானத்தை சரி செய்து நள்ளிரவு 11.45 மணிக்கு  விமானம் புறப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கோஷம் எழுப்பினர். ஆனால் அவர்கள் எழுப்பிய கோஷம் யாருக்கும் கேட்கவில்லை. எனவே பயணிகள் விமான நிலைய ஓடுபாதைக்குள் புகுந்து  போராட்டம் நடத்தப்போவதாக அதிகாரிகளை எச்சரித்தனர்.  சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானப் பயணம் 2.45 மணி நேரம் தான் ஆனால் பயணிகள் சுமார் 14 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. 14 பயணிகள்  தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்றனர். மீதமிருந்த 104 பயணிகள் சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அதில் வயதான நோய்வாய்பட்ட பயணிகள் பலர் இருந்தனர். அவர்கள் சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். ஒரு  சில பயணிகள் தனியார் விமானம் வேண்டாம் அரசு விமானத்தில் செல்லலாம் என்று நினைத்ததற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்று புலம்பியபடி காத்திருக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Travelers ,airport ,Chennai ,trip , 2.45 hours ,traveling, Chennai airport,threatening, runway
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்