×

டாஸ்மாக்கில் நடந்த ரெய்டில் ஒரே நாளில் 1 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சென்னை: சென்னையில் உள்ள 305 டாஸ்மாக் கடைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜனவரி மாதம் முதல் கடந்த மே 2 ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 198 டன்  பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் தடைகுறித்து ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நோட்டீஸ்  கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கடைகளாக இருந்தால் அவற்றை உடனடியாக சீல் வைக்க, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சோதனை மேலும் தீவிரப்படுத்த வார்டு அளவில் 200 குழுக்களை அமைக்க மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். அதன்படி ஒவ்வொரு வார்டிலும் சுகாதாரத்துறை, வருவாய்துறை, பொறியியல் துறை உள்ளிட்ட  அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் இணைந்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும்  ஆய்வு மேற்கொண்டனர்.  இதன் முடிவில் 305 டாஸ்மாக் கடைகளில் இருந்து 904 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர் மண்டலத்தில் 10 கிலோவும், மணலி மண்டலத்தில் 100 கிலோவும், மாதவரம் மண்டலத்தில் 32.5 கிலோவும்,  தண்டையார் பேட்டை மண்டலத்தில் 30 கிலோவும், ராயபுரம் மண்டலத்தில் 51.5 கிலோவும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 44 கிலோவும், அம்பத்தூர் மண்டலத்தில் 113 கிலோவும், அண்ணா நகர் மண்டலத்தில் 137 கிலோவும், தேனாம் பேட்டை  மண்டலத்தில் 27 கிலோவும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 128 கிலோவும், வளசரவாக்கம் மண்டலத்தில் 46 கிலோவும், ஆலந்தூர் மண்டலத்தில் 68 கிலோவும், அடையார் மண்டலத்தில் 13 கிலோவும், பெருங்குடி மண்டலத்தில் 32.5 கிலோவும்,  சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 72 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : raid , Tashmah Raid, plastic, seizure, Municipal
× RELATED திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு...