×

இந்தாண்டும் கடுமையான கெடுபிடிகள் நீட் தேர்வில் மாணவர்கள் கடும் பாதிப்பு: பல மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பு

சென்னை:  நீட் தேர்வில் இந்தாண்டும் கடும் கெடுபிடிகள் காணப்பட்டன. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடும் வெயிலில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் பல மையங்களில் மாணவர்கள், பெற்றோர்கள்  பரிதவித்தனர்.  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பேர் இந்த தேர்வில்  பங்கேற்றனர். தமிழகத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் ேபர் பங்கேற்றனர். மாணவ- மாணவியர் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடுமையான சோதனைகளுக்கு பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 57 ஆயிரம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தி அதன் மூலம் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட  வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டே அறிவித்தது. அதன்படி  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களில் திருத்தம் செய்வது உள்ளிட்ட வாய்ப்புகள் ஜனவரி மாதம் இறுதி வரை அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அதைத் தொடர்ந்து ஜூன் மாதமே மருத்துவ கவுன்சலிங் நடக்கும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது.  பின்னர் மார்ச் மாதம் 15 தேதி முதல்  ஹால்டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 15 லட்சம் பேர் நாடு முழுவதும் தேர்வு எழுத தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.  தேசிய  நுழைவுத் தேர்வு முகமை அறிவித்தபடி மே 5ம் தேதியான நேற்று நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடந்தது.  தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்காக தமிழகத்தில் மட்டும் 14 நகரங்களில் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  நீட் தேர்வு  மே 5ம் தேதி மதியம் 2 மணிக்கு தேர்வு  தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் என்று அறிவித்தபடி, நேற்று காலை 11.30 மணி அளவில் தேர்வு மையங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கே மாணவ -மாணவியர் தேர்வு
மையங்கங்ளுக்கு வரத் தொடங்கினர்.  ஆனால், மாணவ மாணவியர் யாரும் வளாகத்துக்குள்ளேகூட அனுமதிக்காமல், தேர்வு மையங்களின் வளாக நுழைவு வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர்.  பெரும்பாலான தேர்வு மையங்களில் நிழலுக்கு ஒதுங்க கூட அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. அதனால் கடும் வெயிலில் மாணவ மாணவியர் நுழைவு வாயிலின் அருகே கடும் வெயிலில் காத்திருந்தனர். 12.30 மணிக்கு பிறகே  அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயிலின் அருகே தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு எண்கள், ஒதுக்கப்பட்டுள்ள அறை எண் மற்றும் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டிய மற்றும் தடை செய்யப்பட்ட  பொருட்கள் தொடர்பான அறிக்கை ஒட்டப்பட்டிருந்தன.

உள்ளே செல்லும் முன்னே, ஹால்டிக்கெட்டில் உள்ள மாணவ- மாணவியரின் போட்டோ சரியாக உள்ளதா என்று சோதிக்கப்பட்டது, பெற்றோர் மற்றும் மாணவர்களின் கையொப்பம் சரிபார்க்கப்பட்டது. மேலும் ஆதார் அட்டை, வருகைப்  பதிவேட்டில் ஒட்டுவதற்காக பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் எது குறைந்தாலும் அந்த மாணவர்கள் உள்ளே செல்ல முடியாது.  கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்வு மையங்கள் பற்றாக்குறை காரணமாகவும், குறைந்த அளவு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்த காரணத்தாலும் தேர்வு மையங்கள் வேறு மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் பல  மாணவர்கள் வெளி மாநிலங்கள் சென்று ேதர்வு எழுத சிரமப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.  இருந்தாலும் தேர்வு அறிவிப்பு வெளியானதும் விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய மாவட்டத்தில் தேர்வு மையங்கள் கிடைத்துள்ளன. காலம் கடத்தி விண்ணப்பித்தவர்களுக்கு வேறு மாவட்டங்களில் தேர்வு மையம்  ஒதுக்கப்பட்டுள்ளன. பல மாணவர்கள் சென்னையில் தேர்வு எழுத விரும்பி சென்னையை தேர்வு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்தவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிக அளவில்  விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஏகப்பட்ட கெடுபிடிகள்
கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் நீட் தேர்வில் மாணவ மாணவியர் கடுமையான சோதனைகளுக்கு பிறகே  தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி பதற்றமாகவே தேர்வு அறைக்கு  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்வு மையங்களுக்கு வரும் மாணவ மாணவியர் என்ன எடுத்து வரக்கூடாது என்ற பட்டியல் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் குறிப்பிட்ட பொருட்களுடன் வருவோர் நுழைவு வாயலில் தடுத்து நிறுத்தப்பட்டு அவற்றை  பறிமுதல் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் விவரம்:

* எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட துணி வகைகள், துண்டுச் சீட்டுகள், ஸ்டேஷனரி வகைகள், ஜியோமெட்ரி பெட்டி
* எலக்ட்ரானிக் தொடர்பு சாதனங்கள்(செல்போன், புளூடூத், ஏர்போன், மைக்ரோ போன், பேஜர், ெஹல்த்பேண்ட் உள்ளிட்டவை)
* ஹேண்ட் பேக், வாலட், பெல்ட், குல்லா, ஏடிஎம், கிரெடிட், டெபிட் கார்டுகள், பிளாஸ்டிக் அடையாள அட்டைகள், ரிமோட்டில் இயங்கும் சாவி.
* எந்த வகையான கைக் கடிகாரங்கள், கேமரா.
* எந்த வகையான உலோகப் பொருட்களும்.
* உணவுப் பண்டங்கள், தண்ணீர் பாட்டில்.
* மறைமுகமாக தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் பொருட்களான கேமரா, புளூடூத் போன்றவை.

உடையிலும்  கட்டுப்பாடு
அரைக் கையுடன் கூடிய மெல்லிய ஆடைகள், முழுக்கை சட்டை, முழுக்கை டாப்ஸ், அனுமதி இல்லை. பாரம்பரிய உடையில் வரும் மாணவர்கள் 12.30 மணிக்கு முன்னதாவே தெரிவிக்க வேண்டும். சிலிப்பெர் மற்றும் சேண்டல் செருப்புகள்,  ஷூ, ஆகியவை அணிந்து வரவும் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று தேர்வு எழுத  வந்த அனைத்து மாணவியரின் தலை அலங்காரம் எந்த வகையில் இருந்தாலும் அங்குள்ள  பெண் அதிகாரிகள் அவற்றை அவிழ்த்தும், கிளிப் அணிந்து வந்தால் அவற்றை அகற்றியும், ஜடை போட்டு  இருந்தால் அதை பிரித்தும், தலை முடியை விரித்து போட்டபடி செல்ல அனுமதித்தனர்.

மேலும் காதணிகள், கைகளில் மோதிரம் உள்ளிட்டவற்றையும் அகற்றினர்.மாணவியர் அணிந்திருந்த துப்பட்டாவும் அகற்றப்பட்டது. முழுக் கையுள்ள  ஆண்கள் சட்டைகள், பெண்களின் டாப்ஸ், ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,  மாணவர்கள் தங்கள் முழுக்கை சட்டைகளை கத்தரித்து அரைக்கையாக மாற்றி அணிந்து சென்றனர். மாணவியர் வேறு உடைக்கு மாற வேண்டிய நிலை  ஏற்பட்டது. மேலும், மாணவ மாணவியர் அனைவரும் மெட்டல் டிடெக்டரால் முழுமையாக சோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தலைவிரி கோலம்
காஞ்சிபுரம் வையாவூர் பகுதியில் உள்ள குருஷேத்ரா பள்ளி மையத்தில் நடந்த நீட் தேர்வுக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், வந்தவாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவியர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். மாணவிகள் அணிந்து வந்திருந்த வளையல், கம்மல், மூக்குத்தி, கால் கொலுசு, கிளிப் உள்ளிட்ட அனைத்தையும் கழட்டிவிட்டு தலைவிரி கோலமாக அனுமதிக்கப்பட்டனர்.

அரைஞாண் கயிறுக்கும் வேட்டு
மாணவர்கள் அணிந்திருந்த அரை ஞாண் கயிறு, கையில் கட்டியிருந்த கயிறு போன்றவற்றையும் கழட்டி விட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

கர்சிப்புக்கு கட்டுப்பாடு
ஜலதோஷம் உள்ள நபர்கள் கூட கையில் கர்சீப் கொண்டு செல்ல கூடாது என்றும், தங்கள் அணிந்து இருக்கும் துணியிலேயே துடைத்து கொள்ளவும் அறிவுறுத்தினர்.

குடிநீர் கூட இல்லை
சென்னையில் 31 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளே. தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் மற்றும் உடன் வந்த பெற்றோருக்கும் அடிப்படை வ சதிகள் அங்கு  இல்லை. குறிப்பாக மாணவர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று கூறப்பட்டதால் அவற்றை வெளியில் வைத்து சென்றனர். ஆனால், கடும் வெயில்நேரத்தில் தேர்வு எழுத சென்றவர்களுக்கு தேர்வு அறையில் குடிநீர்  கொடுக்கவில்லை என்றும் மாணவ மாணவியர் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்வில் இடம் பெற்ற ேகள்வித்தாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருந்ததாகவும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு  நேற்றைய நீட் தேர்வு எளிதாக இருந்ததாகவும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவில் இடம் ெபற்ற கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவ மாணவியர் தெரிவித்தனர்.

போட்டோ, ஆதார் அவலங்கள்
ெசன்னையில் அமைக்கப்பட்டுள்ள 31 நீட் தேர்வு மையங்களுக்கு காலை 10 மணி முதலே மாணவ மாணவியர் வரத்  தொடங்கிவிட்டனர். 11 மணிக்கு மேல் அதிக அளவில் வரத் தொடங்கினர். தேர்வு மையத்துக்குள் 12.30 மணிக்கு மேல்  செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஹால்டிக்கெட், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாணவி யோகலட்சுமி (விழுப்புரம் மாவட்டம்): நான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவியகரம் கிராமத்தில் இருந்து வருகிறேன். இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வந்ததும், சில நாள் கழித்தே விண்ணப்பித்தேன். அதனால் எனக்கு  சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இன்று அதிகாலையில் திருக்கோயிலூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்தேன். எனக்கு தேர்வு மையம் கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில்  ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வந்த அவசரத்தில் ஆதார் அட்டை எடுத்துவர மறந்துவிட்டேன். அதனால் உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் பிரவுசிங் சென்டருக்கு சென்று ஆதார் நகல் எடுத்து வந்து கொடுத்த பிறகே 1 மணிக்கு பிறகு  அனுமதித்தனர்.

மாணவி சுப: நான் ெசன்னையில் வட சென்னை பகுதியில் இருந்து வருகிறேன். எனக்கு கே.கே.நகரில் பத்மா சேஷத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. போட்டோ வேண்டும் என்று கேட்டனர்.  வருகை பதிவேட்டில் ஒட்ட ஒரு போட்டோ மட்டுமே எடுத்து வந்திருந்தேன். ஆதார் நகலில் போட்டோ ஒட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அதற்கு பிறகு இங்கு போட்டோ எடுத்து கொடுத்தேன். இதற்குள் மணி 1.20 ஆகிவிட்டது.  பெரும் பதற்றமாக இருந்தது. மாணவி உமா: சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்து வருகிறேன். மதியம் 1 மணி அளவில் உள்ளே செல்ல முயற்சித்த போது ஹால்டிக்கெட்டில் பெற்றோர் கையெழுத்து இல்லை என்று அனுமதிக்க மறுத்தனர். அதனால் பதற்றமானது, 1.30  மணிக்கே உள்ளே அனுமதித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : facilities ,centers , very bad ,practice,affected,selection, Many centers ,basic facilities
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!