×

வேலூர் மாங்காய் மண்டியில் 2 டன் ‘கார்பைடு’ மாம்பழங்கள் அழிப்பு

வேலூர்: வேலூர் மாங்காய் மண்டியில் கார்பைடு கல்லில் பழுக்க வைத்த 2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். வேலூர் நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ள மார்க்கெட்கள், பழக்கடைகளில் கார்பைடு கல்லில் வைத்து பழுக்க மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், நாகேஷ்வரன், முத்துமாரியப்பன், ஆரோக்கியபிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வேலூர் மாங்காய் மண்டியில் உள்ள பழக்கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்திருப்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கைவிடுத்தனர். அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் மாம்பழங்களை சதுப்பேரி குப்பை கிடங்கு அருகே ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ கார்பைடு கல் வைத்த மாம்பழங்களால் குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய், வயிற்றுபோக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை வெட்டினால் சதைப்பகுதியில் வெள்ளை நிறம் காணப்படுவதோடு சுவை குறைந்து இருக்கும். இதுபோன்ற மாம்பழங்களை தவிர்க்க வேண்டும். நல்ல மாம்பழங்கள் அடர் மஞ்சள் நிறத்தில் சுவை மிகுந்து காணப்படும். எனவே, பொதுமக்கள் நல்ல மாம்பழங்களை தேர்வு செய்து வாங்கிச் செல்ல வேண்டும், என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore, Mango,
× RELATED சோழவந்தான், மண்ணச்சநல்லூர் 2 அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி