×

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம்: தமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின்  என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த  ஆண்டு நவம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது 4 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன்  பி.லோகூர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில்,  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சி.ஆர்.ஜெயசுகின் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி முறையிட்டார்.  அப்போது அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற பதிவாளர் முன் கடந்த ஜனவரி 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பி.வினோத் கண்ணா, கூடுதல் அவகாசம் கோரினார். அதற்கு  மனுதாரர்  ஜெய்சுகின் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும்  தெரிவித்தார். கே.கே.ரமேஷ்  என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்  செய்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘‘உள்ளாட்சி தேர்தல் நடத்தும் முன்பாக, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அதுதொடர்பான விவரங்களை, மாநில தேர்தல்  ஆணையம் மாநில  அரசிடம் சமர்பிக்கவில்லை. அதனால், உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது. கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான சூழலும்  இல்லை. எனினும் தேர்தல்  நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் மேலும் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் என்றும் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார். மேலும், 4 தொகுதி  இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி  மாணவர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை; திறமை அடிப்படையில் டெல்லியில் தமிழர்கள் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார். இயற்கை ஒத்துழைத்தால் குறிப்பிட்ட  காலத்தில் மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Palani Kumar ,elections ,Salim , Local Elections, AIADMK, Salem, Chief Minister Palanisamy
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...