×

டெண்டரில் “கமிஷனை” குத்தகை எடுக்கும் உள்நோக்கத்துடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார்

* அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு


சென்னை: “டெண்டரில் கமிஷனை” ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் உள்நோக்கத்துடன் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை திட்டமிட்டு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தடுத்து வருகிறார்” என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மக்களவை தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்று “புதிய காரணங்களை” கண்டுபிடித்து, “தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத சூழல் உள்ளது” என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாறி மாறி கங்கணம் கட்டிக் கொண்டு பதில் மனுக்களைத் தாக்கல் செய்து- கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி ஜனநாயகத்தை அடியோடு பாழ்படுத்தி விட்டார்கள். அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு தமிழகத்தில் ஒரு தனி மாநில தேர்தல் ஆணையம் தேவையா என்ற முக்கியமான கேள்வியே எழுந்துள்ளது.

ஜனவரி 2019ல் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, “மே 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என்று உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாக்குறுதி அளித்தது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் இப்போது “மே 31” காலக்கெடு வருகின்ற நேரத்தில் “வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று புதிய காரணத்தைச் சொல்லி மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் கோரியுள்ளது. அதிமுக அரசோ “இப்போதுள்ள சூழலில் தேர்தலை நடத்தவே முடியாது” என்று கை விரித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாறி மாறி பதில் மனுக்களை தாக்கல் செய்து ஒரு “சிறுபிள்ளத்தனமான” விளையாட்டை நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. சுதந்திரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையரை அதிமுக அரசு தனது “பவர் ஏஜெண்ட்” போல் செயல்பட வைப்பது வெட்கக் கேடானது. மாநில தேர்தல் ஆணையருக்கு தேர்தலை நடத்துவதற்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டிய அரசு எவ்விதக் கூச்சமுமின்றி “கால அவகாசம்” கேட்டுக்கொண்டே இருப்பது தோல்வி பயத்தின் உச்சகட்டம். உயர் நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து கொடுத்து ஒரு மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டால், அவரை தனது அரசுக்கு எடுபிடியாகவே செயல்பட வைப்பேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது- மாநில தேர்தல் ஆணையர் பதவிக்குரிய கண்ணியத்தை சூறையாடும் கேடு கெட்ட செயல்.

அடிப்படை பிரச்னைகளை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்- திடீர் பேரிடர்கள், வறட்சிகள் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களை காப்பாற்ற உள்ளாட்சி நிர்வாகம் மிக முக்கியமானது. “தனி அதிகாரிகள்” உள்ளாட்சி நிர்வாகம் என்ற தோப்பாக நிச்சயம் மாறிவிட முடியாது.  உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களை ஊழலுக்கு மட்டுமே பயன்படுத்திட முடியும். டெண்டர்களில் “கமிஷனை” ஒட்டுமொத்தமாக குத்தகை எடுக்கும் உள் நோக்கத்துடன் தான் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் நடத்தப்படுவதை திட்டமிட்டு தடுத்து வருகிறார். ஆகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வரும் “ஒத்துழையாமை இயக்கத்தை” மாநில தேர்தல் ஆணையர் தானாகவே முன் வந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுத்தாளர் செந்தில்பாலனுக்கு வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய Pen to publish 2018, தமிழ் மொழிக்கான நெடும் படைப்பு பிரிவில் திராவிட இயக்கத்தின் இளம் எழுத்தாளரான டாக்டர் செந்தில்பாலன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 3000 எழுத்தாளர்கள் பங்கேற்ற போட்டியில் டாக்டர் செந்தில்பாலன் எழுதிய ‘பரங்கிமலை ரயில் நிலையம்’ என்ற புதினம், கிண்டில் வாயிலாக அதிகமானவர்களால் படிக்கப்பட்டிருப்பதுடன், போட்டிக்கான நடுவர்களாலும் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 5 லட்சம் பரிசாகப் பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றியை பெற்ற டாக்டர் செந்தில் பாலனுக்கு மனம் கனிந்த வாழ்த்துகளை திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், 2000-10,000 வார்த்தைகள் கொண்ட குறும்படைப்பு பிரிவில் பத்திரிகையாளர் விக்னேஷ் சி செல்வராஜ், எழுதிய நீள் கட்டுரையும் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு வாழ்த்தில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : elections ,commission , Tender , deliberately blocking , local elections , intention of leasing, 'commission'
× RELATED தேர்தல் பிரசாரங்களில் விமானம்,...