×

நீதிமன்றம் நியமித்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விசாரணை நடத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்றம் நியமித்த வக்கீல் கமிஷனர்களை தொழிற்சங்கத்தினர் மிரட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அருகே உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து கொடுக்க வாஷின் ஆட்டோமோடிவ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த வாஷின் நிறுவனம் சாவல் என்ற நிறுவனத்திற்கு துணை கான்ட்ராக்ட் கொடுத்தது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, வாஷின் ஆட்டோமோடிவ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட சாவல் நிறுவனத்திற்கு சென்று விசாரித்து வருவதற்காக வக்கீல்கள் சீனிவாசன், ஆறுமுகம் ஆகியோரை வக்கீல் கமிஷனர்களாக நியமித்து கடந்த ஏப்ரல் 15ம் தேதி உத்தரவிட்டார்.

வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் கமிஷனர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆய்வு செய்வதற்காக கடந்த ஏப்ரல் 28ம் தேதி சென்றபோது எங்களை உள்ளே விடாமல் சுமார் 300 பேர் மறித்தனர். மேலும், முத்துக்குமார் என்பவர் தன்னை தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு சுமார் 40 பேருடன் வந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் தடுத்தனர் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த நீதிமன்றம் நியமித்த வக்கீல் கமிஷனர்களை பணி செய்யவிடாமல் தடுத்து அவர்கள் மிரட்டியுள்ளனர்.இதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. எனவே, வக்கீல் கமிஷனர்களை அச்சுறுத்திய விவகாரம் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் காஞ்சிபுரம் எஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Kanchipuram Collector , court has to threaten ,appointed officers
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...