×

மூன்று மாதத்தில் சரத்குமார், ராதாரவி மீதுள்ள வழக்கை முடிக்க வேண்டும் : சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் சங்க நிலத்தை விற்பனை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி மீதான வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை அப்போதைய நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகித்த ராதாரவி, தலைவராக பதவி வகித்த சரத்குமார் மற்றும் நிர்வாகிகளான செல்வராஜ், நடேசன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக விற்பனை செய்ததாக நடிகர் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் நடிகர் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 2017ம் ஆண்டு புகார் அளித்து இருந்தார்.

இந்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குப்பதிவு செய்யக் கோரி நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவினர், கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை எனக் கூறி, வழக்கை வேறு அமைப்பு விசாரணை நடத்த கோரி விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarathkumar ,Radharavi ,Chennai High Court , Sarathkumar should complete the case , Radharavi ,three months,Chennai High Court order
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...