×

வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 253 பேரை கொன்ற தற்கொலைப் படை தீவிரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றார்களா?: இலங்கை ராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

கொழும்பு: இலங்கையில் குண்டுவெடிப்புகளில் 253 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட தற்கொலை படையினர் காஷ்மீர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பயிற்சி பெற சென்றது  அம்பலமாகி உள்ளது. இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் என மொத்தம் 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. . இதில், 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும்  மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பெண் உட்பட 9 மனித வெடிகுண்டுகள் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் உள்ள  ஐஎஸ் அமைப்பின் ஒரு பிரிவான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, இந்த தாக்குதலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த அமைப்பு செயல்பட இலங்கை தடை விதித்துள்ளது. இந்த  தாக்குதலில் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டவர்களை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய ஐஎஸ் அமைப்புக்கு வெளிநாட்டு குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதி மகேஷ் செனநாயகே கொழும்புவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் காஷ்மீர், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு  சென்று வந்துள்ளனர். அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என உறுதியாக தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக தாக்குதல் தொடர்பான பயிற்சி பெற சென்று இருக்கலாம். மேலும், அவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள வேறு  தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்திருக்கலாம்,’’ என்றார்.
 ‘இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தும் கூட, தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என்ற கேள்விக்கு, ‘`நாங்கள் புலனாய்வுத் துறை மற்றும்  பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இது குறித்த தகவல்களை பெற்றோம். இந்திய உளவு அமைப்பும் எங்கள் ராணுவமும் அளித்த தகவல்களுக்கு இடையே  இடைவெளி இருந்ததால், மிரட்டலை நாங்கள் பெரிதாக எடுத்துக்  கொள்ளவில்லை,’’ என்றார்.  ‘இலங்கையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்?’ என்ற மற்றொரு கேள்விக்கு, `‘கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்ட பிறகு கடந்த 30  ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சம்பவங்களை மறந்து மக்கள் அதிகப்படியான சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அதனால், அவர்கள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி விட்டனர்,’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : commander ,Sri Lankan army ,suicide bombers , Bomb attack, suicide squad, and army commander of Sri Lanka
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...