×

மானியம் இல்லை, மாம்பழ கூழ் தொழிற்சாலையும் இல்லை நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ள மாங்காய் சாகுபடி விவசாயிகள்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

வேலூர்: மானியம் இல்லை, மாம்பழ கூழ் தொழிற்சாலையும் இல்லாததால் வேலூர் மாவட்டத்தில் மாங்காய் சாகுபடி விவசாயிகள் நஷ்டமடையும் நிலைக்கு சென்றுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் சேலம் மல்கோவா மாம்பழம் சுவையில் மட்டுமல்ல, உற்பத்தியிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. வேலூர் மாவட்டம் மாங்காய் விளைச்சலில் 2வது இடம் மற்றும் 3வது இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் மாமரங்கள் காலதாமதமாகவே பூக்கள் விட்டன. ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடி செய்யப்படும் தோட்டப்பயிராக மாங்காய்க்கு தனி மவுசு உண்டுஆண்டுக்கு சுமார் 3 லட்சம் டன்  மாங்காய் உற்பத்தியாகும் பகுதி இது. இந்த மாங்காய்களில் 75 சதவீதம் வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் மட்டும் மாம்பழ கூழ் தயாரிக்கும்  சிறியதும், பெரியதுமாக 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இந்நிறுவனங்களுக்கான மாங்காய்கள் சித்தூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும், வேலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்தும் தொழிற்சாலைகள் வாங்கும். இதன் மூலம் வேலூர் மாவட்ட விவசாயிகள் லாபம் பெற்று வந்தனர். தமிழக மாங்காய்கள் ஆந்திராவுக்கு வருவதற்கு கடந்த ஆண்டு ஆந்திர அரசு தடைவிதித்தது. இதனால் வேலூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். வேதனையடைந்த வேலூர் மாவட்ட விவசாயிகள் மாம்பழங்களை  சாலையில் கொட்டி  ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து கடைசி கட்டத்தில் ஆந்திர அரசு தமிழக மாங்காய்களை ஆந்திராவுக்கு அனுப்ப அனுமதி அளித்தது. மேலும், ஆந்திர அரசு அந்த மாநில மாங்காய்களுக்கு ஒரு டன்னுக்கு  ரூ.2,500 விவசாயிகளுக்கு மானியம் வழங்கியது. தொழிற்சாலைக்கு வரும் மாங்காய்களை டன் ரூ.5,000க்கும் குறைவாக பெறக்கூடாது என்று உத்தரவிட்டது.  

இருப்பினும் ஆந்திர விவசாயிகளுக்கு ஒரு டன்னுக்கு ரூ.5,000  முதல் ரூ.7,500 ஆயிரம் கிடைக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு ₹4,000 முதல் அதிகபட்சமாக ₹5,000 வரை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக மாங்காய் சாகுபடி விவசாயிகள் நஷ்டத்தில்  தள்ளப்பட்டனர். இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு மாமரங்கள் கருகி வருகிறது. பல இடங்களில் டிராக்டர்களில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி தோட்டத்துக்கு பாய்ச்சி மாமரங்களை காத்து வருகின்றோம். ஒருசில  இடங்களில் போர்வெல்லில் இருக்கும் தண்ணீரை வைத்தும் பாசனம் செய்கின்றனர், இதுகுறித்து மாங்காய் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் இருந்து செல்லும் மாங்காய்களுக்கு ஆந்திராவில் நல்ல மவுசு உள்ளது. ஆனால் ஆந்திர அரசு தங்கள் மாநில விவசாயிகளின் நிலத்திற்ேக  அதிகாரிகளின் குழுவை அனுப்பி அறுவடை ஆணை வழங்கி நேரடியாக தொழிற்சாலைக்கு வாகனங்களில் அனுப்பியது. அம்மாநில அரசு சார்பில் டன்னுக்கு ₹2,500 மானியம் வழங்கி வருகிறது. அதேபோல் குறைந்தபட்ச  விலையை ₹5,000 முதல் ₹8,000 வரை தொழிற்சாலைகளுக்கு நிர்ணயம் செய்தது.

ஆனால் தமிழக விவசாயிகளுக்கு அதில் பாதி விலை கூட கிடைக்கவில்லை. டன்னுக்கு ரூ.4,000 மட்டுமே வழங்கப்பட்டது. நமது மாவட்டத்தில் மாம்பழ கூழ் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லாததால், நாங்கள் அவர்கள்  தெரிவிக்கும் தொகைக்கு ஆந்திராவில் மாங்காய்களை கொடுத்துவிட்டு வருகிறோம். விவசாயிகளின் நலன் கொண்ட அரசு என்ற பெயரளவில் மட்டுமே தமிழக அரசு சொல்லி கொண்டு வருகிறது. ஆந்திராவை போல் இங்குள்ள  விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இந்த ஆண்டாவது மானியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இங்குள்ள எம்பி, எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வேண்டும். மேலும், வேலூர் மாவட்டத்தில் மாம்பழ கூழ்  உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்துக்கு பறிபோகும் வருமானம்: தமிழகத்தில் பயிரிட்டு, ஆந்திராவில் மாங்காய் விற்பனை செய்யப்படுவதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆந்திராவிற்கு சென்று விடுகிறது. அந்த மாநிலத்தில் அதிகளவில் பிரபல தனியார் தொழிற்சாலைகளை  நிறுவி அந்த மாநிலத்துக்கு வருமானத்தை ஈட்டி வருகிறது. ஆனால் மா விளைச்சலில் 3வது இடம் பிடிக்கும் வேலூர் மாவட்டத்தில் பெயரளவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓரிரு தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளது. எனவே  மா விளைச்சல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அந்தந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்தால், அப்பகுதி விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்  சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் பேச்சு காத்தோடு போச்சு: கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் கொண்டு செல்லப்பட்ட மாங்காய்களுக்கு சித்தூர் மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது, மாங்காய் விவசாயிகள், உள்ளூர் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் முறையிட்டனர்.  தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்ேபாது, வேலூர் மாவட்ட மாங்காய் சாகுபடி விவசாயிகளுக்கும் ஆந்திராவில் மானியம் வழங்குவது போல, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். ஆனால் கடந்த ஆண்டு இறுதி வரை  எந்த அறிவிப்பும் இதுதொடர்பாக வரவில்லை. அமைச்சரின் பேச்சு காத்தோடு போச்சு என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தாண்டாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு மானியம் வழங்க நடவடிக்கை  எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : growers , No subsidy, mango pulp, factory, loss, mango cultivation, farmers, Tamil Nadu government
× RELATED அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க கோரிக்கை