அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளில் 14 இடங்களில் வெயில் சதம் : மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்

சென்னை: அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி ெவயில் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகப்பட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மாலை நேரத்தில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் வெயில் தாக்கம் இந்த மாதங்களில் அதிகமாக இருந்தது. அதிகப்பட்சமாக 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 26 நாட்கள் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி எடுக்க போகிறது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் மிக அதிகமாக இருந்தது. சாலையில் நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று பலமாக வீசியது. சென்னையை பொறுத்தவரை காலை 8 மணி முதலே அனல் காற்று வீச தொடங்கியது. போக, ேபாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் ரயில் போன்றவற்றில் சென்றவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். நடந்து சென்றாலே அணிந்திருக்கும் சட்டை ஈரமாகும் அளவுக்கு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.

மதியம் வேளையில் சென்னையில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து என்பது மிக, மிக குறைவாகவே காணப்பட்டது. பல சாலைகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி ெவறிச்சோடி காணப்பட்டது. வீடுகளில் மின் விசிறி அனல் காற்றை கக்கியதால் வீடுகளில் இருந்தவர்களும்
கடும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் வெளியில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி போயினர். மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் கொடுமையில் இருந்து விடுபடவும், கடற்காற்றின் சுகத்தை அனுபவிப்பதற்காகவும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் பூங்காக்களில் மக்கள் படையெடுக்க தொடங்கினர். மாலை 6 மணிக்கு மேல் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரையில் இரவு 9.30 மணி வரை குடும்பம் குடும்பமாக பொழுதை கழித்தனர்.

அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலையோரத்தில் புது புதுசாக ஜூஸ் கடைகள் முளைக்க தொடங்கியுள்ளன. இங்கு சர்பத், இளநீர், பழச்சாறு, மோர் உள்ளிட்டவற்றின் விற்பனை களைக்கட்டியிருந்தது. அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளான நேற்று 14 நகரங்களில் வெயில் சதம் அடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும். மேலும் மாநிலத்தில் அதிகப்பட்சமாக திருத்தணியில் 111.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ேவலூரில் 109.76 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 106.16 டிகிரி, திருச்சியில் 105.98 டிகிரி, கரூர் பரமத்தியில் 104.36 டிகிரி, சென்னை விமான நிலையம் 103.28 டிகிரி, பரங்கிப்பேட்டை 103.1 டிகிரி, பாளையங்கோட்டை 102.92 டிகிரி, நாகப்பட்டினம் 102.38 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 101.84 டிகிரி, காரைக்காலில் 101.12 டிகிரி, சேலம் 100.76 டிகிரி, கடலூர் 100.76 டிகிரி, தர்மபுரி 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெயிலில் இருந்து தப்பிக்க வழிகள்...

* வெயிலால் வியர்வை அதிகம் வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறையும்.  எனவே, அதை ஈடு செய்ய அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தது  3 லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் டிஹைட்ரேஷன் என்கிற நீர் இழப்பு, சன்  ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

* டீ, காபி குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானம்  குடிப்பதை தவிர்க்க வேண்டும். மோர், இளநீர், சர்பத், பதநீர், பழச்சாறுகளை  அருந்தலாம். மண்பானை தண்ணீரைக் குடிப்பது நல்லது.

* காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவசிய தேவைக்கு பகலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால் தொப்பி அணிந்து செல்லலாம். குடையை எடுத்து செல்லலாம்.

* உடலில் வியர்க்குரு வருவதை தடுக்க தினமும் காலை, மாலை என 2 வேளையும்  குளிக்க வேண்டும். வெயிலில் சென்று வீடு திரும்பும் போது கை, கால்களை  நன்றாக கழுவ வேண்டும்.

* “சிக்கன் பாக்ஸ்” எனப்படும் சின்னம்மையை உருவாக்கும் `வெரிசெல்லா  ஸோஸ்டர்’’  என்ற வைரஸ் கோடைக்காலத்தில் வீரியமாக செயல்படும்.  பாதிக்கப்பட்டவரிடம் இருந்து காற்றின் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக பரவும்.  எனவே அதிக அரிப்பு, காய்ச்சல் இருந்தால் டாக்டரை உடனே அணுக வேண்டும்.  அம்மை நோய்க்கு தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : start ,Agni ,house ,places , On the first day , Agni star, weigh in 14 places
× RELATED ‘கிளீன்’ ஆகிறது வைகை ஆறு கருவேலம்...