×

விவசாயம், குடிநீருக்கு உதவாத வகையில் ஏராளமான ஏரிகள் நாசம்: திருவள்ளூர், காஞ்சியில் மண் குவாரி அமைத்து அதிகாரிகள் கொள்ளை: நீர்நிலை பாதுகாப்புக்கு உருவாகுமா தனி அமைப்பு?

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுப்பணித் துறை பொறியாளர் பெயரில் டெண்டர் வழங்கப்பட்டு, ஏரிகளில் மண் குவாரிகள் நடத்தப்பட்டதில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்  எழுந்துள்ளது. நீர்வரத்து பகுதிகளில் மண் எடுத்திருப்பதால், விவசாயத்திற்கோ, குடிநீர் ஆதாரமாகவோ, ஏரிகளை பயன்படுத்த முடியாமல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தில், கடந்த 2016ம் ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த்ததை அடுத்து, பாசனத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நீர்நிலைகள் வறண்டன. அவற்றின் கொள்ளளவை உயர்த்த, நீர்நிலைகளில், வண்டல் மண்  எடுக்க, விவசாயிகளுக்கு, அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அரசாணை, 2017 ஏப்ரல் 24ல் வெளியிடப்பட்டது.அதன்படி, தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 42,115 ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில், 36,345 நீர்நிலைகளில் இருந்து, மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன்  ஆக்கிரமிப்புகளை அகற்றி மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

அவ்வாறு எடுக்கப்படும் மண்ணை, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கவும், பொதுப்பணித் துறையினர் சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும்  உத்தரவிடப்பட்டது.
இதை தனியாரிடம் வழங்கினால், மண் திருட்டுக்கு வழிவகுக்கும் என்பதை கருத்தில் வைத்து, பொதுப்பணித்துறை பொறியாளர் பெயரிலேயே டெண்டர் வழங்கி, அவர்கள் வாயிலாக மண் எடுக்க முடிவு செய்யப்பட்டது. நல்ல  நோக்கத்திற்காக அரசால் பிறப்பித்த இந்த அரசாணையை, ஏரி மண்ணுக்கு கிராக்கி இருக்கும் பகுதிகளில், லாப நோக்கத்திற்காக மண்ணை விற்று பணம் சம்பாதிக்க அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், ‘’பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியில்லாமல் ஒருபிடி மண்ணை  கூட எடுக்கக் கூடாது. அதனால்  மண் அள்ளும் டெண்டர் கலெக்டர் அனுமதியுடன் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் வாயிலாக மேல் மட்டத்தில் உள்ள முக்கியப் புள்ளிகளுக்கு மாற்றப்படுகிறது.

ஏரி, குளம் ஆகியவற்றை ஆழப்படுத்துவதற்கான காலத்தை பொறுத்து, டெண்டர் காலம் 45 முதல் 55 நாட்கள் வரை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, நாளொன்றுக்கு 100 லோடுகள் வீதம், நிர்ணயிக்கப்படும் கால அளவிற்கேற்ப  5,000 முதல் 5,500 லோடுகள் வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் தங்களின் லாபத்திற்காக, 50 ஆயிரம் லோடுகள் வரை மண் அள்ள மறைமுகமாக அனுமதி அளிக்கின்றனர். இந்த வகையில், ஒரு ஏரியின் குறிப்பிட்ட நாட்களுக்கு வழங்கப்படும் டெண்டர் முடிவதற்குள், பல லட்சம் ரூபாய் வரை அந்த ஏரி சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனைவரும் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். எந்த பகுதியில் மண் தேவை அதிகம் உள்ளதோ, அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளை தேர்வு செய்து, ‘’தூர்வாரி ஆழப்படுத்துகிறோம்’’ என்ற பெயரில், கலெக்டரிடம் அனுமதி பெற்று, அதிகாரிகள் மண் திருடி விற்கின்றனர்.

நீர்வரத்து பகுதிகளில் மண் எடுக்கப்படுவதால், மழைக்காலங்களில், ஏரிக்கு நீர் வராது. இதனால், விவசாயம் அழிவதுடன், குடிநீர் பயன்பாட்டிற்கும், நீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. கால்நடைகள், விவசாயம்  மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக, நம் முன்னோரால் உருவாக்கப்பட்டவை தான் ஏரி, குளங்கள். இவை தற்போது, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் சம்பாதிக்கும் தளமாக பயன்படுத்துகின்றனர். எனவே, நீர்நிலைகளில்  மண் திருட்டு நடப்பதை தடுக்கவும், அவற்றை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் தனி அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்றனர்.

திருவள்ளூர், காஞ்சியில் சூறையாடப்பட்ட ஏரிகள்: கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம், ஏகாட்டூர், கசவநல்லாத்தூர், வெண்மணம்புதூர், திருப்பாச்சூர் இஷா ஏரி, பட்டறைபெரும்புதூர், பாண்டூர், சிவன்வாயல், உட்பட பல ஏரிகளிலும், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் மணிமங்கலம், மாடம்பாக்கம், அகரம் உட்பட பல ஏரிகளிலும், அரசு நிர்ணயித்துள்ள 55 நாட்கள் என்ற உத்தரவையும் தாண்டி, 68 நாட்கள் வரை மண் எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு, 5,000 லோடுக்கு பதில், 25  ஆயிரம் முதல் 50 ஆயிரம் லோடுகள் வரை மண் கொள்ளை நடந்து உள்ளது. இதில், 10 சதவீதம் கூட சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, மொத்த மண்ணும் மேல் மட்ட  அளவில், முக்கிய புள்ளிகள் ஆதரவுடன் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், ஒரு லோடு ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்கப்பட்டு உள்ளது. இதனால், ஏரிகள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு,  தூர்வாருதல் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான லோடு மணல் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.


சப்-டெண்டர்  விட்டு கமிஷன்: ஏரிகளில் மண் குவாரி அமைக்க பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பெயரில் மாவட்ட கலெக்டர் குத்தகை வழங்குவார். ஆனால், அங்கு பொதுப்பணித்துறை குவாரி நடத்தாது. அரசியல் புள்ளிகள் யாருக்காவது, சப் -  டெண்டர் போல் கொடுத்து விடுகின்றனர். அவர்கள், 55 நாட்களில் 50 ஆயிரம் லோடு வரை மண் எடுப்பர். ஒரு லோடு மண்ணுக்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள செயற்பொறியாளர்,  மேற்பார்வை பொறியாளர் ஆகியோருக்கு, தலா ₹50 வீதம் கமிஷன் வழங்க வேண்டும். இந்த வகையில், ஒரு ஏரியில் மண் குவாரி நடந்தால் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மட்டும் ₹20 லட்சம் முதல், ₹30 லட்சம் வரை  கமிஷனாக கிடைக்கும் என கூறப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lakes ,organization ,Kanjiru ,Tiruvallur , Agriculture, Drinking Water, Lakes, Tiruvallur, Kanji, Soil Quarry, Officials, Poultry, Water Conservation, Separate Organization
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!