தேர்தல் ஆணையத்துக்கு மோடி, அமித்ஷா மீதான பயம் குறைந்து வருகிறது’ : ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: ‘‘மோடியின் விதிமீறலுக்கு ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, ஆணையம் புத்துயிர் பெறுவதைக் காட்டுகிறது,’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, பாஜ தலைவர் அமித் ஷா ஆகியோர் நடத்தை விதிகளை மீறுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த மாதம் 1ம் தேதி வாத்ராவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, ‘பயத்தினால்தான் ராகுல் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வயநாட்டில் போட்டியிடுகிறார்’ என்று கூறினார். 9ம் தேதி லத்தூரில் நடந்த  பிரசாரத்தில், ‘புல்வாமா தாக்குதலில் வீரர்களுக்காகவும், பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியதற்காகவும் முதல்முறை வாக்காளர்கள் பாஜ.விற்கு வாக்களிக்க வேண்டும்’ என பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இது பற்றி காங்கிரஸ் அளித்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், இந்த பேச்சில் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் இப்பிரச்னை பற்றி ஆலோசனை நடந்தபோது, தேர்தல் ஆணையர்களில் ஒருவர், ‘மோடி பேசியது தவறுதான்’ என எதிர்ப்பு தெரிவித்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டர் பதிவில், ‘மோடி, ஷா பேச்சில் தவறு இருப்பதாக தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, இறுதியாக தேர்தல் ஆணையம் புத்துயிர் பெற்றுள்ளதை காட்டுகிறது. அடுத்த 3 கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இருவரையும் கண்டித்திருக்க வேண்டும். இதேபோன்று பிற அரசு அமைப்புகளும் ஊடகங்களும் மோடி, அமித் ஷா மீதான பயத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்படும் என்று நம்புகிறேன். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா அடங்கிய அமர்வு ஒருங்கிணைந்து இதுபோன்று முடிவு எடுக்கும் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Amidisha ,Election Commission ,P. Chidambaram , Modi, Amidisha , scared of the Election Commission, P. Chidambaram
× RELATED அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை