×

மின்சாரம், தகவல் தொடர்புகள் அடியோடு துண்டிப்பு பானி புயலில் உருக்குலைந்தது ஒடிசா

* பலி 12 ஆக அதிகரிப்பு; மீட்பு பணிகள் முழுவீச்சு
* முகாம்களில் 12 லட்சம் பேர் தொடர்ந்து தங்கவைப்பு

புவனேஸ்வர் : பானி புயல் தாக்கியதால் ஒடிசா மாநிலம் உருக்குலைந்து விட்டது.  மின்சாரம், தகவல் தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன.  மேலும், புயலால் ஏற்பட்ட விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக  உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த  மாநிலத்தை விட்டு புயல் கடந்த போதிலும், நிவாரண முகாம்களில் தொடர்ந்து 12  லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான பானி  புயல், நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில்  கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 முதல் 250 கிமீ வரை பலத்த காற்று  வீசியது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, மேற்கூரைகள் பறந்தன.  நேற்று முன்தினம் இரவு வரை 8 பேர் பலியாகினர். இந்நிலையில், புயல்  பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நேற்று 12 ஆக உயர்ந்தது. புதிதாக பலியான 4 பேரும் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பாரிபடா பகுதியில் பல  இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் சிக்கி இவர்கள் பலியாகினர்.  மின்கம்பங்கள் சாய்ந்ததால் 30 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் மட்டுமே 10 ஆயிரம்  மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. புயலால் தாக்கப்பட்ட மாநிலத்தின்  பெரும்பாலான இடங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி மருத்துவமனை,  ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக பூரி, குர்தா, கஞ்ஜம், ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் பாலசோர்  மாவட்டங்களில் மின் சப்ளை முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தகவல்  தொடர்பும் முற்றிலும் சேதமாகி, துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்களின்  இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில்  மீட்புப்  பணி தீவிரமாக நடக்கிறது.

சாலைகளில் சாய்ந்துள்ள மரங்கள், மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள் மற்றும் கோபுரங்கள் போன்றவற்றை அகற்றி, இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. விரைவு  நடவடிக்கை குழுவினர் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். ஏராளமான கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.  புயல்  பாதிப்புகளை நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்த பிறகு ஒடிசா முதல்வர்  நவீன் பட்நாயக் அளித்த ேபட்டியில், ‘‘மின்சப்ளை கட்டமைப்பு முற்றிலும்  துண்டிக்கப்பட்டுள்ளது. அதை மறுசீரமைப்பு செய்வது என்பது சவலான பணிதான்.  மொபைல் கோபுரங்கள், மரங்கள், மின்கம்பங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. புனித  நகரமான பூரி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை  சீர்படுத்துவதற்காக சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்களை  அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு  படையினர் ஈடுபட்டுள்ளனர். 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு சமைத்து இலவசமாக  வழங்கப்படுகிறது. தொலைத்தொடர்பும் பல பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. அதை  சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. கோடை பயிர்கள் பழமரங்கள்  ஆகியவும் பெருமளவு பாதிப்படைந்து உள்ளது,’’ என்றார்.

ஒடிசாவில் கோரத்தாண்டவம் ஆடிய பானி புயல், மேற்கு வங்கத்தின் வடக்கு  மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர்,  ஹவுரா, கூக்ளி, ஜார்கிராம் கொல்கத்தாவை தாக்கி விட்டு, வங்க தேசத்துக்குள்  நுழைந்து பெரும் சேசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம், மேற்கு  வங்கத்தில் இந்த புயல் தாக்குதலால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்  வெளியாகவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிகவும் அபாயகரமான  புயலாக பானி கருதப்பட்டது. இருப்பினும், இதன் தாக்குதலில் பெரியளவில்  உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது பெரும் பாராட்டை பெற்றுள்ளது.  ஐநா.வின் பேரழிவு குறைப்பு முகமையும் இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு  பாராட்டு தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், `20 ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயல் ஒடிசாவை தாக்கியபோதும், அரசின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  புயல் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த மிகவும் துல்லியமான  கணிப்பால் இது சாத்தியமாகி இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

மீட்பு பணியில் கடற்படை

புயல் பாதித்த ஒடிசாவில் கிழக்கு கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உணவு பொருட்கள், தேவையான மருந்துகள், துணிமணிகள், மரங்களை அறுக்க பயன்படும் சாதனங்கள் ஆகியவை ஒடிசாவில் உள்ள கடற்படை தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் தண்ணீரில் தவிக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

நீட் தேர்வு ஒத்திவைப்பு

மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடக்கிறது. ஒடிசாவில் புயல் தாக்கியதால் பெரும் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி மாநில அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்த மாநிலத்தில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மம்தாவை தவிர்த்து கவர்னரிடம் பேச்சு

புயல் பாதிப்பு பற்றி மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதியுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, புயல் பாதிப்பில் இருந்து மேற்கு வங்க மக்கள் மீள வேண்டும் என தெரிவித்த மோடி, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதால், அவருடன் மோடி பேசவில்லை.

வங்கதேசத்தில் 14 பேர் பலி

ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களை தாக்கிய பிறகு, அண்டை நாடான வங்கதேசத்துக்குள் பானி புயல் நுழைந்தது. இதனால் பெய்த கனமழையால், அந்த நாட்டில் 35 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 16 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். நோகாகாளில், போலா லட்சுமிபூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புயல் கடுமையாக தாக்கியது. இதில் 2 வயது சிறுவன், 4 பெண்கள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். 63 பேர் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

எவரெஸ்ட் மலையில் முகாம்கள் பறந்தன

ஒடிசாவை தாக்கிய பானி புயல், எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 21 ஆயிரம் அடி உயரத்தில் மலையேற்ற வீரர்கள் தங்குவதற்கான 2வது மையம் உள்ளது. அந்த உயரத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய பானி, அங்கிருந்த 20 முகாம்களை தூக்கி வீசியுள்ளது. இதில், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Odisha ,Bani , Electricity and communications, totally disconnected from ,Bani storm ,odisha
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...