×

அக்னி நட்சத்திரம் தொடங்கியது: சிவாலயங்களில் தாராபிஷேகம்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கியது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு தாராபிஷேகம் நடைபெற்றது. அக்னி நட்சத்திர காலங்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படும். அதனால் சூரியனின் கதிர்கள் விழும்போது அதிக வெப்பமாக தெரியும். இப்படி பூமியானது சூரியனை ஒரு புள்ளியில் இருந்து சுற்றத்தொடங்கும் இந்த காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் காலம் என வழக்கத்தில் கூறப்படுகிறது. இக்காலத்தில் வெயிலின் பாதிப்பும் அதிகம் இருக்கும். கடும் வறட்சி நிலவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய காலம்.

இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் இன்று தொடங்கியது. வரும் 29ம் தேதி வரை சுமார் 26 நாட்கள் வாட்டி வதைக்கப்போகிறது. இதற்கு முன்னோட்டமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பத்தில் லேசான வெயில் அடிக்க தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல தனது உக்கிரத்தை காட்ட தொடங்கியது. இதனால் குளிர்பான கடைகளிலும், பழச்சாறு மற்றும் இளநீர் கடைகளிலும் மக்கள் கூடி தாகத்தை தணித்துக்கொண்டனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை குடைகள் பிடித்தபடியும், முகத்தை துணியாமல் மூடியபடியும் வெளியே சென்றனர்.

அக்னி நட்சத்திரத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு சிவன் கோயில்களில் தாராபிஷேகம் இன்று தொடங்கியது. இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டது. தினமும் உச்சிகால பூஜை தொடங்கி, சாயரட்சை பூஜை வரை கருவறையில் மூலவருக்கு தாராபிஷேகம் நடைபெறும். அப்போது, ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை, பன்னீரில் கலந்து இறைவன் மீது துளித்துளியாக விழும்படி தாராபிஷேகம் செய்யப்படும். எனவே, தாராபிஷேகம் நடைபெறும் காலங்களில் இறைவனுக்கு கவசம் அணிவிக்கும் வழக்கம் இல்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : star ,Agni ,temples ,Shiva , Agni star, Thiruvannamalai, Annamalaiyar, temple
× RELATED அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி