×

5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 5ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் நடக்கும் வாக்குப்பதிவுக்கு 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடப்பதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 4 கட்டமாக முடிந்த நிலையில், மீதமுள்ள 3 கட்டங்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே தென்மாநிலங்கள் அனைத்திலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், 5ம் கட்டமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பீகாரில் 5 தொகுதிகள், காஷ்மீரில் 2, ஜார்கண்டில் 4, மத்தியப் பிரதேசத்தில் 7, ராஜஸ்தானில் 12, உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடைபெறும் வாக்குப்பதிவை முன்னிட்டு, அனைத்து தொகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 674 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 668 வேட்பாளர்களின் அபிடவிட் விபரங்கள் வெளியாகி உள்ளது. இவர்களில், 149 பேர் தேசிய கட்சிகளையும், 31 பேர் மாநில கட்சிகளையும், 236 பேர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், 252 பேர் சுயேட்சைகளாகவும் போட்டியிடுகின்றனர்.

மொத்த வேட்பாளர்களில் 88 சதவீதம் ஆண்களும், 12 சதவீதம் பெண் வேட்பாளர்களும், 19 சதவீதம் வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகளும் உள்ளன. சொத்து விபரங்களை பொறுத்தமட்டில் ரூ. 5 கோடிக்கு மேல் 9 சதவீதம் பேரும், ரூ. 2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 9 சதவீதம் பேரும், ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை 21 சதவீதம் பேரும், ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை 29 சதவீதம் பேரும், ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக 32 சதவீதம் பேரும் தங்களுக்கு சொத்து இருப்பை காட்டியுள்ளனர். கல்வித் தகுதியை பொறுத்தமட்டில் 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 40 சதவீதம் பேரும், பட்டதாரிகள் 52 சதவீதம் பேரும், கல்வியறிவு பெற்றவர்கள் 6 சதவீதம் பேரும், கல்வியறிவு இல்லாதவர் இரு சதவீதமும் பெற்றுள்ளனர். குற்றப்பின்னணியை பொறுத்தவரை பாஜ வேட்பாளர்கள் 48 பேரில் 38 பேர் மீதும், காஸ்கிரசில் 45 பேரில் 32 பேர் மீதும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 33 பேரில் 17 பேர் மீதும், சமாஜ்வாதி வேட்பாளர்களில் 9 பேரில் 8 பேர் மீதும் குற்றவழக்குகள் உள்ளன. வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐமு தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் அமைச்சர் ஜிடின் பிரசாதா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்ததால், தலைவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : phase ,election campaign , Election, campaign, voting
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்