×

கோடை சீசனுக்கு அடிப்படை வசதி செய்யவில்லை

* நகராட்சி மீது குற்றச்சாட்டு
* சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி : கோடை சீசன் துவங்கிய போதிலும் ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளில் நகராட்சி நிர்வாகம் அக்கரை காட்டி கொள்ளாமல் இருப்பது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 ஆண்டு தோறும் கோடை விடுமுறையின் போது வெளிமாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த மக்களே அதிகம் வருவது வழக்கம்.

இது போன்ற சமயங்களில் சாதாரண நாட்களில் வரும் சுற்றுலா பயணிகளை காட்டிலும் பல மடங்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது அவசியம. பொதுவாக, கோடை சீசன் சமயங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குறிப்பாக, ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஆண்டு தோறும் கோடை சீசன் துவங்கும் முன், அதாவது மார்ச் மாதமே நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கும். கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்து, கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.

மேலும், நகரில் எங்கும் குப்பைகள் இல்லாதவாறும், பார்த்துக்கொள்ளளும். ஆனால், இம்முறை நகராட்சி நிர்வாகம் இது போன்று எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது. நகரின் முக்கிய சாலைகளான ஏடிசி., மணி கூண்டு சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.  அதேபோல், எட்டினஸ் சாலை, அப்பர்பஜார் சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனை சீரமைக்கமால் உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களில் ஊட்டி நகருக்குள் வாகனங்கள் வரும் மாற்று சாலையான மஞ்சனக் கொரை சாலை எப்போதும் மார்ச் மாதம் சீரமைக்கப்படும் அல்லது பள்ளங்களை மூடி மராமத்து பணிகளை மேற்கொள்ளும். ஆனால், இம்முறை இச்சாலை சீரமைக்கப்படாமல் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள ஒரு சில கழிப்பறைகளின் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
 ஆனால், இதனை நகராட்சி அதிகாரிகள் கண்டுக் கொள்வதில்லை.

அதேபோல், நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கோடை சீசன் துவங்கினால், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர இதற்கு முன் இருந்த நகராட்சி அதிகாரிகள் ‘ஸ்கெட்ச்’ போட்டு பணியாற்றுவார்கள். ஆனால், தற்போது உள்ள அதிகாரிகள் அரசு விழாக்கள் இடங்களில் வந்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பதற்கு மட்டுமே வருகின்றனர்.

நகரில் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றாமல் உள்ளனர். இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுறு்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, ஊட்டி நகரை சுத்தமாகவும், சுகாதாரத்துடனும், அனைத்து அடிப்படை வசதிகளுடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : summer season ,facilities , ooty, basic facility,neelagiri, season
× RELATED கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணி தீவிரம்